பர்கூரில்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


பர்கூரில்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூரில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்ததாக கூறி நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிதி நிறுவனம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜெகதேவி ரோட்டில் ஓம் சக்தி கோவில் அருகில் 3-வது தளத்தில் சென்னை ஆவடியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கடந்த 1½ ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். தினசரி, வாராந்திர, மாதாந்திர சீட்டுகள் நடத்தப்படுவதாகவும், கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி பொதுமக்களையும், சிறு வியாபாரிகளையும் சேர்த்து பணம் வசூல் செய்து வந்துள்ளார்.

இதில் பர்கூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக சேர்ந்து பணம் கட்டி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக பணம் வசூல் செய்யும் நிதி நிறுவனத்தை ேசர்ந்த ஊழியர்கள் பணம் வசூலிக்க வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் நிதி நிறுவனத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது அவர்கள் நிறுவனத்தை காலி செய்து விட்டு சென்று விட்டது தெரியவந்தது.

ரூ.1 கோடி மோசடி

இந்த சம்பவம் சீட்டு பணம் கட்டி வந்த பொதுமக்களுக்கு காட்டுத்தீயாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணம் முதலீடு செய்த பொதுமக்கள் நிதி நிறுவனத்தின் முன்பு திரண்டனர். அவர்கள் திடீரென நிதி நிறுவன வளாகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது நிதி நிறுவனத்தில் பர்கூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சீட்டு போட்டு வந்தோம். சுமார் ரூ.1 கோடிக்கு மேல் பணம் கட்டினோம். கடந்த ஒரு மாதமாக ஊழியர்கள் சீட்டு பணம் வசூலிக்க வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து வந்து பார்த்தபோது நிதி நிறுவனத்தை அவர்கள் காலி செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். நாங்கள் கட்டிய சீட்டு பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும் என்று பொதுமக்கள் கண்ணீர் மல்க வலியுறுத்தினர்.

போலீசார் விசாரணை

பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தின் மீது புகார் கொடுங்கள். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர் இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story