பஸ்சில் ஏறி மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்; 25 பேர் மீது வழக்கு
விருத்தாசலம் அருகே பஸ்சில் ஏறி மாணவர்களை சரமாரியாக தாக்கிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ம.க., வி.சி.க.வினர் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னவடவாடியில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு அரசு பஸ் விருத்தாசலத்துக்கு புறப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பயணிகள் இருந்தனர். இந்த பஸ், வயலூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தது.
அப்போது வயலூரை சேர்ந்த 25 பேர் கொண்ட ஒரு கும்பல் பஸ்சில் ஏறி, அதில் வந்த சின்னவடவாடியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களை சரமாரியாக தாக்கியது. இதை பார்த்து பஸ்சில் வந்த பயணிகள் செய்வதறியாமல் திகைத்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த 10 மாணவர்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
பா.ம.க.வினர் சாலை மறியல்
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் கார்த்திகேயன் தலைமையிலான பா.ம.க.வினர் மற்றும் சின்னவடவாடி, எ.வடக்குப்பம் கிராம மக்கள், விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களை தாக்கிய கும்பலை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். அங்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், மாணவர்களை தாக்கிய கும்பலை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
வி.சி.க.வினர் போராட்டம்
இதனை தொடர்ந்து வயலூரை சேர்ந்த 3 வாலிபர்களை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இதை கண்டித்து வயலூர் காலனி மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அய்யாயிரம் தலைமையில் போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர். அதில், 25-க்கும் மேற்பட்டவர்கள் பஸ்சில் ஏறி, மாணவர்களை தாக்கியது பதிவாகி இருந்தது.
பதற்றம்; போலீஸ் குவிப்பு
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவனுக்கும், வயலூரை சேர்ந்த மாணவருக்கும் நேற்று முன்தினம் பள்ளியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வயலூரை சேர்ந்தவர்கள், பஸ்சில் ஏறி மாணவர்களை தாக்கியது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வயலூர் காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லோகேஷ் உள்பட 25 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் மகன் விஜயகாந்த்(20), கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜேஷ்(20), ராஜமாணிக்கம் மகன் அஜித்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 22 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.