கிணத்துக்கடவு முள்ளுப்பாடி கிராமத்தில் 26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய தடுப்பணை-விவசாயிகள் மகிழ்ச்சி
கிணத்துக்கடவு முள்ளுப்பாடி கிராமத்தில் 26 ஆண்டுகளுக்கு பின் தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு முள்ளுப்பாடி கிராமத்தில் 26 ஆண்டுகளுக்கு பின் தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தடுப்பணை
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முள்ளுப்பாடி கிராமத்தில் கருப்பராயன் கோவில் வழியாக வறட்டாறு செல்கிறது. வறட்டாறு குறுக்கே பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணைகளுக்கு தண்ணீர் கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் உள்ள ஜக்கார்பாளையம், கப்பளாங்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பெய்யும் மழை நீர் வறட்டாறு வழியாக முள்ளுப்பாடி கிராமத்தை அடைந்து அங்கிருந்து சூலக்கல் ஆற்றுக்கு செல்கிறது. வறட்டாறு வழியாக கேரளாவுக்கு செல்கிறது. இந்த வழித்தடத்தில் பல இடங்களில் தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.
26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது
இதில் முள்ளுப்பாடி பகுதியில் கருப்பராயன் கோவில் அருகே 1952-ம் ஆண்டு முள்ளுப்பாடியை சேர்ந்த விவசாயி ஒருவர் 10 அடி ஆழத்தில் பிரமாண்டமான வறட்டாறு குறுக்கே தடுப்பணை கட்டி, பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு வழங்கினார். இந்த தடுப்பணை 1996-ம் ஆண்டு மழையின்போது நிரம்பியது. அதன் பின்னர் இந்த தடுப்பணையில் தண்ணீர் நிரம்பாமல் காணப்பட்டது. ஆனால் தற்போது பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக அந்த தடுப்பணை நிரம்பி உள்ளது. இதுகுறித்து விவசாயி செந்தில்குமார மூர்த்தி கூறியதாவது:- கருப்பராயன் கோவில் அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை 1996-ம் ஆண்டுக்குப் பிறகு 26 வருடங்கள் கழித்து தற்போது தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. தடுப்பணை நிரம்பி காணப்படும் காட்சியை பார்க்கும் போது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிவதால் எங்களது கிராமப் பகுதியில் விவசாயம் செழிப்பாக நடப்பதோடு குடிதண்ணீர் பிரச்சினையும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.