வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் தடுப்பு கம்பிகள்


வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் தடுப்பு கம்பிகள்
x

குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளத்தில் தடுப்பு கம்பிகள் அடித்து செல்வதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளத்தில் தடுப்பு கம்பிகள் அடித்து செல்வதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தடுப்பு கம்பிகள்

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் குரங்கு நீர்வீழ்ச்சி (கவியருவி) உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வனப்பகுதிகளில் உற்பத்தியாகும் நீரோடைகள் மூலம் நீர்வரத்து உள்ளது. இங்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வனத்துறை சார்பில் நீர்வீழ்ச்சியில் தடுப்பு கம்பிகள் அமைத்து கொடுக்கப்பட்டன.

இதனால் குழந்தைகள், பெண்கள் பயப்படாமல் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். இதற்கிடையில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வெள்ளத்தில் தடுப்பு கம்பிகள் அடித்து செல்லப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

நடவடிக்கை

குரங்கு நீர்வீழ்ச்சியில் வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. மேலும் யானைகள், புலிகள், மான்களின் உருவம் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன. பெண்கள், குழந்தைகள் நீர்வீழ்ச்சிக்கு நடந்து செல்ல வசதியாக படிக்கட்டுகள், தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும் போது தடுப்பு கம்பிகள் அடித்து செல்லப்படுவது வாடிக்கையாகி விட்டது. பின்னர் வனத்துறையினர் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே தடுப்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை தடுக்க உரிய ஆய்வு மேற்கொண்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story