ஆதிதிராவிடர்- பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தொழில்முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்க புதிய திட்டம்-விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் சாந்தி தகவல்


ஆதிதிராவிடர்- பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தொழில்முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்க புதிய திட்டம்-விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் சாந்தி தகவல்
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 25 May 2023 6:46 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

ஆதிதிராவிடர்- பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

விழிப்புணர்வு முகாம்

தர்மபுரி மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசால் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை தொழில் அதிபர்களாக மாற்றும் பொருட்டு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு திட்டமாகும். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக இத்திட்டம் பெறும் பயனுள்ளதாக அமையும். இந்த முகாமில் பங்கேற்றிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் தகுதிவாய்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மானியத்தொகை

இந்த திட்டத்தின் கீழ் மொத்த திட்ட தொகையில் 35 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை) மானிய தொகையாக வழங்கப்படும். சொந்த நிதியில் இல்லாமல் வங்கி கடன் பெற விரும்பினால், மீதமுள்ள 65 சதவீதம் வங்கி கடனாக பெற உரிய ஆலோசனைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வங்கி கடனுக்கு திருப்பி செலுத்தும் காலம் முழுமைக்கும் 6 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.

புதிதாக தொழில் தொடங்குவோர் மட்டுமல்லாது, ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்தவும், தொழில் ரீதியாக மேம்படுத்தவும் மானிய உதவி பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி தேவையில்லை. 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பம்

இந்தத் திட்டத்திற்கான கடன் உதவி பெற www.msmseonline.tn.gov.in/aabcs என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்பம் பதிவு ஏற்றம் செய்ய சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் சாந்தி பேசினார்.

முகாமில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகைவாசன், மேலாளர் வாசுகி, சீட்ஸ் மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுகிசிவம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாயக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story