அடிப்படை வசதிகள் இல்லாத ரெயில் நிலையம்
பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே புகழ் பெற்றதாக விளங்கி வரும் தேவகோட்டை ரஸ்தா ரெயில்வே நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடையும் நிலை உள்ளது.
காரைக்குடி,
பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே புகழ் பெற்றதாக விளங்கி வரும் தேவகோட்டை ரஸ்தா ரெயில்வே நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடையும் நிலை உள்ளது.
புகழ் பெற்ற ரெயில் நிலையம்
காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் பிரிட்டிஷ் காலத்தில் வெள்ளையர்கள் இந்த பகுதியில் இருந்து இறங்கி தேவகோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக கொண்டு வரப்பட்ட ரெயில் நிலையமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ரெயில் நிலையத்தில் சமீபகாலமாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது.
தற்போது திருச்சி-மானாமதுரை வரை உள்ள ரெயில்வே பகுதிகளை மின் மயமாக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே காரைக்குடி-திருச்சி வரை இந்த பணி நிறைவடைந்து தற்போது மின்சார ரெயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் இருந்து மானாமதுரை வரை இந்த மின்சார பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இத்தகைய வசதிகள் வந்தாலும் கூட இந்த ரெயில் நிலையத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது வேதனைக்குரியதாகும்.
பயணிகள் அவதி
தேவகோட்டை, திருவாடனை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்னை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டுமானால் இந்த ரெயில் நிலையத்தைதான் பயன்படுத்துகின்றனர். இதனால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதன் உட்பகுதியில் உள்ள ஒரே ஒரு சுகாதார வளாகமும் பூட்டிய நிலையில் உள்ளது.
மேலும் ரெயில் நிலையத்தின் வெளியே தனியார் சார்பில் அமைக்கப்பட்ட ரெடிமேட் கழிப்பறையும் பூட்டிய கிடக்கிறது. இதன்காரணமாக இங்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அடிப்படை பிரச்சினை
இதுகுறித்து பயணி முருகன் கூறுகையில், இந்த ரெயில் நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்கள் ஆங்காங்கே இடிந்து விழுந்த நிலையில் உள்ளது. இதேபோல் ரெயில்வே நிலையத்தின் உட்பகுதியில் உள்ள நடை மேடை பகுதியில் வெட்டப்பட்டு பல ஆண்டுகளாகிய மரங்களும் அங்கேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட சிற்றுண்டி சாலையும் எப்போதும் பூட்டியே கிடப்பதால் பயணிகள் அவசரத்திற்கு ஏதாவது பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது என்றார்.
கோரிக்கை
பயணி கஸ்தூரி கூறியதாவது:- ரஸ்தா ரெயில் நிலையம் பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே புகழ்பெற்று விளங்குகிறது. ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
கழிப்பறை பூட்டி கிடப்பதால் இங்கு வரும் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குடிப்பதற்கு தண்ணீர் வாங்க கூட கடை இல்லை என்று கூறினார். மேலும், இந்த ரெயில் நிலையத்தில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரெயில்வேக்கு இப்பகுதி மக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.