நாமக்கல் அரங்கநாதர் மலைக்கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?


நாமக்கல் அரங்கநாதர் மலைக்கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?
x

நாமக்கல் அரங்கநாதர் சாமி மலைக்கோவிலில் வருகிற அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்குள் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.

நாமக்கல்

அரங்கநாதர் கோவில்

நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் கட்டப்பட்ட குடவறை கோவிலான அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதையொட்டி அன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

அப்போது ஆகம முறைப்படி பட்டாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகளை செய்து, பரமபத வாசல் வழியாக ஜடாரியை கூடையில் எடுத்து வருவார்கள். இதனிடையே சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் நாமக்கல் மட்டுமின்றி பிற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்காக அரங்கநாதர் கோவிலுக்கு வருவது வழக்கம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மலையில் கழிப்பிட வசதி இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவர்களின் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அடிப்படை வசதி

இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட உள்ளது. அதற்குள் அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்களின் பயன்பாட்டிற்காக தற்காலிக கழிவறை வசதியாவது ஏற்படுத்தி தர வேண்டும் என ஆன்மிக அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றன. மேலும் மலைக் கோவிலில்பரவலாக குடிநீர் குழாய்களை அமைக்கவும் அவர்கள்வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து ஆன்மிக இந்து சமயப்பேரவையின் கவுரவ தலைவர் ஏகாம்பரம் கூறியதாவது:-

குடவரைக் கோவிலான அரங்கநாதர் கோவிலில் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் பயன்பாட்டுக்காக கழிப்பறை வசதி கிடையாது. கோவிலில் சுகாதார வளாகம் இல்லாததால், கோவிலுக்கு வர அர்ச்சகர்கள் தயங்குகின்றனர். அதனால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பக்தர்கள்மற்றும் அர்ச்சகர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே மலைக்கோவில் வளாகத்தில் நிரந்தரமாக சுகாதார வளாகத்தை ஏற்படுத்தித் தர இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறையினர் மூலம் உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். அதேபோல் வருகிற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு குறைந்தபட்சம் தற்காலிக கழிவறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மலைக்கோவில் வளாகத்தில் தென் புறத்திலும், வட புறத்திலும் குடிநீர் குழாய்களை அமைத்து, பரவலாக பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

யானை பாதை

நாமக்கல் நகர வளர்ச்சிக்குழு நிர்வாகி வாசுதேவன் கூறியதாவது:-

நாமக்கல் மலைக்கோட்டையின் மீது உள்ள அரங்கநாதர் சாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வழிபடுகின்றனர். மலை மீதுள்ள கோவிலுக்கு 88 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். படிக்கட்டுகளின் நடுவில் முதியவர்கள் கைபிடித்து ஏறுவதற்கு ஏதுவாக கம்பிகள் ஏதும் இல்லை. மேலும் படிக்கட்டு களும் சற்று பெரிதாக உள்ளது. அதனால் முதியவர்கள் மலை கோவிலுக்கு ஏறிச் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே மலை மீது முதியவர்கள் சிரமமின்றி ஏறிச்செல்வதற்கு வசதியாக யானை பாதை அமைக்க வேண்டும். அதோடு படிக்கட்டுகளின் நடுவில் கைப்பிடி கம்பிகளை வைக்க வேண்டும். மேலும் கோவில் அடிவாரத்தில் முன் பகுதியில் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. அதனால் அங்கு ஒரு உயர்மின் கோபுர விளக்கு அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story