ஜங்ஷன் அந்தஸ்து பெற்ற நிலையிலும்-அடிப்படை வசதிகள் இல்லாத காரைக்குடி ரெயில் நிலையம்


ஜங்ஷன் அந்தஸ்து பெற்ற நிலையிலும்-அடிப்படை வசதிகள் இல்லாத காரைக்குடி ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஜங்ஷன் அந்தஸ்து பெற்ற ரெயில் நிலையமாக உள்ள காரைக்குடி ரெயில் நிலையத்திற்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகங்கை

காரைக்குடி

ஜங்ஷன் அந்தஸ்து பெற்ற ரெயில் நிலையமாக உள்ள காரைக்குடி ரெயில் நிலையத்திற்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

காரைக்குடி ரெயில் நிலையம்

தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருச்சி, மதுரை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் உள்ள ரெயில்வே சந்திப்பு நிலையங்களுக்கு அடுத்தப்படியாக பி கிரேடு அந்தஸ்து பெற்ற ரெயில்வே சந்திப்பு நிலையமாக விளங்கி வருவது காரைக்குடி ரெயில் நிலையம் ஆகும். இந்த ரெயில் நிலையம் வழியாக தினந்தோறும் சென்னை, ராமேசுவரம், கோயமுத்தூர், செங்கோட்டை, கன்னியாகுமரி, பாண்டிச்சேரி, வாரணாசி, புவனேசுவரம், எர்ணாகுளம், செகந்திராபாத், வேளாங்கண்ணி, திருவாரூர் உள்பட பல்வேறு இடங்களுக்கு சுமார் 22 ரெயில்கள் விரைவு ரெயில்களாக சென்று வருகிறது.

இதுதவிர ராமேசுரம், திருச்சி, மன்னார்குடி, விருதுநகர் உள்ளிட்ட பயணிகள் ரெயிலும் சென்று வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த ரெயில் நிலையத்தில் பல்வேறு வசதிகள் குறைபாடுகள் உள்ளதால் இங்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள்

சென்னை மற்றும் நெடுந்தூரம் செல்லும் ரெயில்கள் நின்று செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையத்தில் மொத்தம் 5 பிளாட் பாரங்கள் உள்ளன. இந்த பிளாட் பாரங்களில் விரைவு ரெயிலில் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை அடையாளம் காட்டும் வகையில் டிஜிட்டல் போர்டுகள் ஜங்ஷன் அந்தஸ்து பெற்ற ரெயில் நிலையங்களில் இருப்பது வழக்கம். ஆனால் இந்த ரெயில் நிலையத்தில் சாதாரண போர்டுகள் உள்ளதால் பெட்டிகள் அருகில் வந்து பார்த்தால்தான் அந்த பெட்டிகளின் கோச் எண் தெரியும் நிலை உள்ளது.

இதுகுறித்து தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிட மணி கூறியதாவது:-

காரைக்குடி ரெயில் நிலையத்தில் கிராசிங் செய்வதற்காக ஏற்கனவே ரெயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் நடை மேம்பாலம் பாதை உள்ளது. இந்த பாதை தூரமாக உள்ளதால் சற்று தூரம் நடந்து சென்று அந்த நடை மேம்பாலத்தின் வழியாக ஏறி சென்று மறு பிளாட் பாரத்திற்கு செல்லும் நிலை உள்ளதால் பயணிகள் அதை கடப்பதற்கு அவதியடைகின்றனர்.

புதிய நடை மேம்பாலம்

தற்போது உள்ள ரெயில் டிக்கெட் கவுண்டர் முதல் பிளாட்பாரத்தின் அருகிலே புதிய நடை மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடம், மின்விளக்குகள், மேற்கூரைகளை கூடுதலாக அமைக்க வேண்டும். புதிய ரெயில் நிலையத்தின் கட்டிடத்தின் மேல் பகுதி காலியாக உள்ளதால் அதில் கட்டிடம் கட்டி குறைந்த வாடகைக்கு பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்றார்.

சுப்பிரமணியன் (சமூக ஆர்வலர்):- காரைக்குடி ரெயில் நிலையம் முக்கியமானதாக உள்ளதால் பயணிகளுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். பழைய ரெயில் நிலையத்திற்கும், புதிய ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளதால் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. அப்பகுதியில் கூடுதலாக மின்விளக்குகள் அமைக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் சென்று வரும் வகையில் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் இயக்க வேண்டும். ரெயில்கள் வரும் நேரத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டவுண் பஸ்கள் இயக்க வேண்டும். திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் ராக்போர்ட் விரைவு ரெயிலையும், கொல்கத்தா செல்லும் ஹவுரா விரைவு ரெயிலையும், பாலக்காடு செல்லும் டீ கார்டன் விரைவு ரெயிலையும் காரைக்குடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றார்.


Next Story