அடிப்படை வசதி செய்து தரக்கோரி சாலை மறியல்; 29 பேர் கைது
குன்னம் அருகே அடிப்படை வசதி செய்து தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 29 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஓலைப்பாடி ஊராட்சி வேப்பூர் கிராம பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் வேப்பூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
29 பேர் கைது
வேப்பூர் கிராம மக்களுக்கு குடிநீர், சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரியும், கழிவு நீர் வாய்க்காலில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றக்கோரியும், வேப்பூர் அரசு மருத்துவமனையில் தேவையான டாக்டர்களை பணி அமர்த்த கோரியும், 100 நாள் வேலைவாய்பை முறையாக வழங்க வேண்டும் எனவும், வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பஸ் நிலையத்தில் அமர்வதற்கு இடம் அமைத்து தர கோரியும், பெண்களுக்கு வேப்பூர் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரியும், அரசு பள்ளி வாசல் முன்பு கால்நடைகளை கட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சுகாதார சீர்கேட்டை தடுக்க கோரியும், மாணவிகள் கல்லூரி வேலை முடிந்து அவர்கள் சொந்த ஊர் செல்வதற்கான போதுமான பஸ் வசதி செய்து தரக்கோரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் மறியலில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து, அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட 29 பேரை குன்னம் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர்.