அனைத்து தரப்பினருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க செய்ய வேண்டும்


அனைத்து தரப்பினருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க செய்ய வேண்டும்
x

அனைத்து தரப்பினருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.

சேலம்

அனைத்து தரப்பினருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.

மண்டல அளவில்ஆய்வுக்கூட்டம்

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நகராட்சி நிர்வாக துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்றுநடந்தது.

அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (வேளாண்மை, உழவர் நலத்துறை), காந்தி (கைத்தறி மற்றும் துணிநூல் துறை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி நகராட்சி நிர்வாக துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த நிதி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கருணாநிதியின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1,000 கோடியும், நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.400 கோடியும், சிறப்பு நிதியாக சென்னை மாநகராட்சிக்கு ரூ.890 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட குடிநீர்

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். அனைத்து பகுதிகளுக்கும் மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்படும். ஏரி, குளங்கள் மேம்படுத்தி நிலத்தடி நீரினை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிசை பகுதிகள் உள்ள இடமாக இருந்தாலும் அங்கும் சாலை, தெரு விளக்கு, கழிவறை வசதிகள் ஏற்படுத்துவது அரசின் நோக்கமாகும். அந்தவகையில் அனைத்து தரப்பினருக்கும் தேவையான அடிப்படை வசதிகளும் கிடைக்க செய்வதை நகராட்சி நிர்வாகத்துறை அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

பேரூராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அந்த வகையில் குப்பைகள் சேரும் இடத்திலேயே தரம் பிரித்து மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கவும், மக்காத குப்பைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும், சுகாதாரமுமாகவும் மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது என்பதை அறிவேன். நிதிநிலையின் காரணமாக நிரப்பப்படவில்லை. விரைவில் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பணியமர்த்தப்படுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி

தொடர்ந்து அம்மாபேட்டையில் செயல்படாமல் உள்ள சேலம் கூட்டுறவு நூற்பாலையை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது செயல்படாமல் உள்ள இந்த நூற்பாலையை ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானமாகவோ அல்லது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். முன்னதாக மேலும், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து மாணவ, மாணவிகள் வரைந்த விழிப்புணர்வு ஓவிய கண்காட்சியை பார்வையிட்டார்.

கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் பொன்னையா, கலெக்டர்கள் கார்மேகம் (சேலம்), ஸ்ரேயா சிங் (நாமக்கல்), சாந்தி (தர்மபுரி), மாநகராட்சி மேயர்கள் ராமச்சந்திரன் (சேலம்), சத்யா (ஓசூர்), ஆணையாளர்கள் கிறிஸ்துராஜ், பாலசுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், ராமலிங்கம், பொன்னுசாமி, பிரகாஷ், மதியழகன், வெங்கடேஷ்வரன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story