அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும் என புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் மகேஸ்வரி கூறினார்.
கள்ளக்குறிச்சி
பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த குமரன் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2 மாதங்களாக திண்டிவனம் நகராட்சி ஆணையர், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்த நிலையில் பண்ருட்டி நகராட்சி ஆணையராக பணிபுாிந்து வந்த மகேஸ்வரியை கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நேற்று காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். மகேஸ்வரிக்கு நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதன் பின்னர் புதிய ஆணையர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-
உடனுக்குடன்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் குடிநீர், மின்விளக்கு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அந்த குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும்.
அதேபோல் வார்டுகளில் உள்ள குறைகள் சம்பந்தமாக பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது விசாரணை செய்து உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்சினையாக இருந்தால் உடனே தீர்த்து வைக்கப்படும். உடனே நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளாக இருந்தால் விதிமுறைகளுக்குட்பட்டு அந்த கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சி நகராட்சியின் வளர்ச்சிக்காக முழு வீச்சில் செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.