வளர்ந்து வரும் நகரமான மத்தூரில் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


வளர்ந்து வரும் நகரமான மத்தூரில் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

மத்தூர்:

வளர்ந்து வரும் நகரமான மத்தூரில் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மத்தூர் நகரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் நகரம் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். மத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கிரானைட் குவாரிகள், டைல்ஸ் மெருகூட்டும் ஆலைகள், மாங்கூழ் தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் விவசாயமும், மலர்சாகுபடியும் அதிகமாக உள்ள நகரமாக மத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதி விளங்குகிறது.

முக்கியமான சாலைகள் சந்திக்க கூடிய பகுதியாக மத்தூர் நகரம் உள்ளது. பெங்களூரு-புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தர்மபுரி-சென்னை செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்க கூடிய பகுதிகளாக மத்தூர் உள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகள்

மத்தூரை பொறுத்தவரையில் போக்குவரத்துக்கு உரிய உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் தினந்தோறும் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக மத்தூர் பஸ் நிலையம் சரியாக அமைக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை.

இதன் காரணமாக பயணிகள் அனைவரும் பஸ் நிலையம் அருகே பஸ்சிற்காக காத்திருக்கிறார்கள். இதனால் காலை முதல் இரவு வரை அங்கு 100-க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்த வண்ணம் இருப்பார்கள். இதனால் கட்டியும் பயனில்லாமல் மத்தூர் பஸ் நிலையம் உள்ளது.

புதிய பஸ் நிலையம்

இதைத் தவிர மத்தூர் பஸ் நிலையத்தை ஒட்டி கடைகள் அதிக அளவில் உள்ளன. அந்த பகுதியில் பிரதான சாலையில் ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். ஏன் என்றால் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய ஊர்களுக்கு செல்ல கூடிய பஸ்கள் பிரிந்து செல்ல கூடிய முக்கிய சாலையில் ரவுண்டானா இல்லாததால் அனைத்து பஸ்களும் நடுரோட்டிலேயே நிறுத்தி செல்லும் நிலை உள்ளது.

இதனால் ரவுண்டானா அமைத்தால் மக்களுக்கு பயனாக இருக்கும். அதே போல பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றி புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். தற்போதைய பஸ் நிலையம் இன்றைய போக்குவரத்து, மக்கள் தொகைக்கு ஏற்ப திட்டமிட்டு அமையப்படவில்லை.

உயர்மட்ட மேம்பாலங்கள்

இதனால் பஸ் நிலையத்தை அருகில் உள்ள பொதுப்பணித்துறை மைதானத்தில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன் அருகில் அரசு மருத்துவமனை, போலீஸ் நிலையம், வங்கிகள் அமைந்துள்ளன.

மேலும் மத்தூரில் ஊத்தங்கரை மற்றும் தர்மபுரி பிரிவு சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்த சாலைகளில் ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக இந்த பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பிலும், கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை சந்திப்பிலும் சுரங்கப்பாதை, உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மக்கள் எதிர்பார்ப்பு

தொழில் நிமித்தமாகவும், பல்வேறு பணிகளுக்காகவும் மத்தூர் நகருக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். அவர்கள் மழை, வெயில் காலங்களில் ஒதுங்க போதிய நிழற்கூடங்கள் இல்லை. மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மின்வாரிய அலுவலகம், திருப்பத்தூர் சாலை சிவன் கோவில் அருகில் நிழற்கூடங்கள் அமைக்க வேண்டும்.

மத்தூரில் போக்குவரத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதற்கான நிதியை ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்திட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-

புதிய பஸ் நிலையம் வேண்டும்

குமார், மத்தூர்:

வளர்ந்து வரும் நகரமான மத்தூரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. மேலும் மத்தூர் பகுதியில் இருந்து மக்கள் அருகில் உள்ள போச்சம்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அடிக்கடி செல்கிறார்கள். எனவே மத்தூரில் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்திட வேண்டும். மேலும் புதிய பஸ் நிலையத்தை எதிர்கால மக்கள் தொகை, போக்குவரத்தை திட்டமிட்டு, அதற்கேற்ப அடிப்படை வசதிகளுடன் புதிதாக கட்ட வேண்டும்.விபத்து நடக்க கூடிய பகுதிகளை கண்டறிந்து அங்கெல்லாம் ரவுண்டானாக்கள் அமைக்க வேண்டும். மேலும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் பகுதியில் பாலங்கள், சுரங்க பாதைகள் அவசியம் தேவைப்படுகிறது.

ராஜாமணி, மத்தூர்:

மத்தூர் பஸ் நிலையத்திற்குள் பெரும்பாலான பஸ்கள் வருவதில்லை. அதனால் பஸ் நிலையம் உள்ள பகுதி வெறிச்சோடியே காணப்படுகிறது. மேலும் பஸ் நிலையமும் காட்சி பொருளாகவே விளங்குகிறது. அனைத்து பஸ்களும் பஸ் நிலையம் வந்து செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துக்கள் நடக்கும் பகுதிகளில் ரவுண்டானாக்கள், வேகத்தடைகள், அமைத்திட வேண்டும்.


Next Story