மாநில கூடைப்பந்து போட்டி தொடங்கியது


மாநில கூடைப்பந்து போட்டி தொடங்கியது
x

நாமக்கல்லில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை அரைஸ் அணி வெற்றிபெற்றது.

நாமக்கல்

கூடைப்பந்து போட்டி

நாமக்கல்லில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது. கொரோனாவின் தாக்கம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 23-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது.

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் கூடைப்பந்து பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 11 அணிகளும் என மொத்தம் 31 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. முதல்நாள் போட்டிக்கு நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் துணை தலைவர் பரந்தாமன், மாநில கூடைப்பந்து கழக துணைத்தலைவர் பாலா, இணை செயலாளர் அருள் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், கே.கே.பி., குரூப் சேர்மன் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா போட்டியை தொடங்கி வைத்தார்.

சென்னை அணி வெற்றி

முதல் போட்டியில் சென்னை அரைஸ் அணியும், ஈரோடு எல்.எம்.ஆர்., அணியும் மோதின. அதில், சென்னை அரைஸ் அணி 85-க்கு 67 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து போட்டிகள் நடந்தன. வருகிற 5-ந் தேதி இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு தனித்தனியாக முதல் பரிசு ரூ.60 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.50 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.40 ஆயிரம், 4-ம் பரிசு ரூ.30 ஆயிரம் மற்றும் சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.

போட்டிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் நடராஜன், சேர்மன் பாண்டியராஜன், செயலாளர் முரளி, துணைத்தலைவர் கணேஷ் தேவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


Next Story