குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை


குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று பரவலாக கன மழை பெய்தது. குற்றாலம் மெயின் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

செங்கோட்டையில் கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல இடங்களில் பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்கிறது. நேற்று காலை நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

ஆனால், தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. சுரண்டையில் மாலை 4 மணி முதல் மிதமான மழை பெய்தது. செங்கோட்டையில் மாலை 4.20 மணிக்கு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை 5 மணி வரை நீடித்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

அருவியில் குளிக்க தடை

குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாகவும், பனிமூட்டமும் காணப்பட்டது. குளிர்ந்த சூழல் நிலவியது. சாரல் மழை விட்டு விட்டு தூறியது.

மாலை 5 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 20 நிமிடம் பெய்தது. கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மற்றும் குற்றாலம் வந்த அய்யப்ப பக்தர்கள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம்

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் காலை 7 மணி முதல் 7.20 மணி வரையிலும், உடன்குடியில் காலை 7.30 மணி முதல் 7.50 மணி வரையிலும், ஆறுமுகநேரியில் 5.30 மணி முதல் 6 மணி வரையிலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.


Next Story