பாயசத்துக்காக பாய்ந்து, பாய்ந்து மோதிக்கொண்ட மணமக்கள் வீட்டார்


பாயசத்துக்காக பாய்ந்து, பாய்ந்து மோதிக்கொண்ட மணமக்கள் வீட்டார்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:30 AM IST (Updated: 6 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில், திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமக்கள் வீட்டார் பாயாசத்துக்காக பாய்ந்து, பாய்ந்து மோதிக்கொண்ட ருசிகர சண்டை நடந்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மயிலாடுதுறை

சீர்காழியில், திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமக்கள் வீட்டார் பாயாசத்துக்காக பாய்ந்து, பாய்ந்து மோதிக்கொண்ட ருசிகர சண்டை நடந்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பாயச தகராறு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கொள்ளிடம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், சீர்காழி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்த விழா நேற்று முன்தினம் நடந்தது.

இதில் மணமகன் வீட்டாருக்கு முறையாக உணவு பரிமாறவில்லை என்றும், திருமண விழாவுக்கே உரிய பிரத்யேக உணவான பாயசம் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மணமகன் மற்றும் மணமகள் வீட்டை சேர்ந்த இளைஞர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. முதலில் ஆரம்பித்த வாய்த்தகராறு பின்னர் கைகலப்பாக மாறியது.

பாய்ந்து, பாய்ந்து மோதல்

கைகலப்பு திருமண மண்டப வாசல் வரை நீடித்து, மண்டபத்துக்கு வெளியே பிரதான சாலையில் இரு தரப்பு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் பாய்ந்து, பாய்ந்து தாக்கிக்கொண்டனர். அப்போது இருதரப்பு பெரியோர்களும், இளைஞர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசாரும் அங்கு சென்று மணமக்கள் வீட்டாரை சமாதானம் செய்து வைத்ததுடன், அமைதியான முறையில் நிச்சயதார்த்தத்தை முடித்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.

சமூக வலைதளத்தில் வீடியோ

திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயச ருசிக்காக நடந்த இந்த ருசிகர சண்டையை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story