மின் விபத்துகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்


மின் விபத்துகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:47 PM GMT)

வடகிழக்கு பருவமழையின்போது மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சந்திரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின் விபத்துகளை தவிர்க்க

விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின் கம்பங்கள், மின் கம்பிகள், தளவாட பொருட்கள் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. களப்பணியாளர்கள், இயற்கை இடர்பாடுகளின்போது துரிதமாகவும், உடனடியாகவும் நிவர்த்தி செய்யும்பொருட்டு அலுவலர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முழுவீச்சில் எந்நேரமும் செயல்படும் வகையில் உள்ளனர்.

அதேநேரத்தில் பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின் தடை, மின்சார பழுது போன்ற புகார்களை 24 மணி நேரமும் சென்னை தலைமையகத்தில் இயங்கும் 9498794987 என்ற எண்ணிலும், 9445855768 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தெரிவிக்கலாம். அறுந்து தரையில் விழுந்து கிடக்கும் மின் கம்பிகள், தாழ்வு மற்றும் தொய்வான மின் கம்பிகளை பொதுமக்கள் தொட வேண்டாம். மின்சாரம் சார்ந்த பொருட்களில் தன்னிச்சையாக செயல்படாமல் சம்பந்தப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அறிவுரை

இடி- மின்னலின் போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை இயக்குதல் கூடாது. மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். மின்கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர்களின் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும், கால்நடைகளையும் கட்ட வேண்டாம்.

இடி- மின்னலின்போது தஞ்சமடைய மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பிவேலி போன்றவை இல்லாத பகுதிகளை தேர்ந்தெடுங்கள். அவசர நேரங்களில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இருப்பிடம் அமைய வேண்டும். பொதுமக்கள் தங்களது வீடு, கடை, ஓட்டல் ஆகியவற்றில் வயரிங் செய்யும்போது தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட வயரிங் பொருட்களை உபயோகித்தும், முறையான நில இணைப்பு கொடுத்தும் வயரிங் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மின்கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும்பொருட்டு ஆர்.சி.சி.பி. பிரேக்கர் பொருத்துமாறும், பழுதான மின் உபகரணங்களை உடனடியாக மாற்றியமைத்து விபத்தை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு

மேலும் தங்கள் பகுதியில் மின்சாரம் சார்ந்த புகார்களுக்கும், மின் கம்பிகள் அறுந்துவிழும் அவசரகால சமயங்களிலும் விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர்- 9445855738, கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர்- 9445855769, திண்டிவனம் செயற்பொறியாளர்- 9445855835, செஞ்சி செயற்பொறியாளர்- 9445855784 என்ற செல்போன் எண்களை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வோடும், மிகுந்த முன்எச்சரிக்கையுடனும் செயல்பட்டு மின் விபத்துகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story