மக்களிடம் கனிவாக பழகுங்கள்: இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை


மக்களிடம் கனிவாக பழகுங்கள்: இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
x

ஏழை எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்று இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று, 2022-ம் ஆண்டிற்கான இந்திய குடிமைப் பணிகள் (ஐ.ஏ.எஸ்.) தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 வெற்றியாளர்களை வாழ்த்தி ஆற்றிய உரை வருமாறு:-

இந்தியாவின் மிகுந்த பெருமைக்குரிய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள். முதல்-அமைச்சராக மட்டுமல்ல, உங்களது தந்தையின் இடத்தில் இருந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அகில இந்திய போட்டித் தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றது என்பது, உங்களது கடினமான உழைப்பையும், கூர்மையான அறிவையும், விடாமுயற்சியையும் எடுத்துக் காட்டுகிறது.

தேர்வில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றாலும் சிலரால் மட்டுமே வெற்றி பெற முடியும். அந்த விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரில் நீங்களும் ஒருவர். உங்களில் கிராமப்புற முகங்களும் தென்படுகின்றன. உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியாகவும் நீங்கள் இருக்கலாம். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். இந்த இடத்துக்கு உங்களை உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எந்நாளும் மறக்காதீர்கள்.

கிராமப் பகுதி மக்கள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். பணிகள் என்பது உயர்ந்த அரசு பணிகள் என்பதைத் தாண்டி, அதற்கென ஒரு தனி பொறுப்பும் கடமையும் உண்டு. உயர்ந்த பதவி என்பது அதைவிட பன்மடங்கு கடமையையும் பொறுப்பையும் உள்ளடக்கியதாகும். இந்த நாட்டின் எளிய மக்கள், குறிப்பாக கிராமப் பகுதி மக்களின் வாழ்வு, அரசின் பல்வேறு திட்டங்களினால்தான் மேம்பட வேண்டும். இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமான நாட்டில் இது மிக மிக முக்கியமானது.

அதற்கு அரசு திட்டங்கள் முறையாக, அவர்களைச் சென்று அடைய வேண்டும். அது நடைபெற வேண்டும் என்றால், உங்களைப் போன்ற சிறந்த அலுவலர்கள் திட்டங்களைக் கண்காணித்து செயல்படுத்திட வேண்டும்.

மகளிர் உரிமைத் தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தி, ஒரு கோடி மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தர இருக்கிறோம். உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில், தரவரிசைப்படுத்தப்பட்ட 146 நாடுகளில் இந்தியா 127-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதும் மிகவும் கவலைக்குரிய செய்தியாகும். இதை நீக்குவதற்கான முயற்சியாகவும் இந்தத் திட்டத்தை திட்டமிட்டுள்ளோம்.

மகளிருக்கு பொருளாதார வலிமை ஏற்படுத்தும் திட்டமாக இதை வடிவமைத்துள்ளோம். யாருக்கெல்லாம் இது கிடைக்கும் என்று கேட்டபோது, 'யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் அவசியத் தேவையோ, அவர்களுக்கெல்லாம் கிடைக்கும்' என்று நான் சொன்னேன். இதற்கிடையே வருகிற அனைத்து ஆலோசனைகளையும் ஏற்று எந்த சிக்கலும் இல்லாமல் அதை செயல்படுத்துவோம். இப்போது என்னுடைய முழு கவனம் இதில்தான் இருக்கிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மிகுந்த ஆர்வத்தோடு இதில் இறங்கிவிட்டார்கள்.

கனிவாக பழகுங்கள்

இத்தகைய துடிப்பும், ஆர்வமும் கொண்டவர்களாக நீங்களும் நீங்கள் பணியாற்றும் இடங்களில் செயல்பட வேண்டும். உங்களை நாடி வரும் ஏழை எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. மக்களிடம் கனிவாக பழகுங்கள். அவர்கள்தான் நமக்கு உண்மையான மேலதிகாரிகள். அவர்களிடம்தான் நீங்கள் முதலில் நற்பெயர் எடுக்க வேண்டும். இதை நீங்கள் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

படிப்பை நிறுத்தி விடாதீர்கள். இந்த சமூகத்தைப் பற்றி படியுங்கள். அதுதான் உங்களை மிகச் சரியாக வழிநடத்தும். உங்களது பயிற்சி காலத்தில், சட்ட விதிகள், நடைமுறைகள், அரசுத் திட்டங்கள், அவற்றிற்கான விதிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி எல்லாம் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அதை எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் விட்டுத் தராமல் செயல்படுங்கள். சட்டம் என்ன சொல்கிறது என்பதையும், உங்கள் மனச்சாட்சி என்ன சொல்கிறது என்பதையும் பாருங்கள். அதன்பிறகு செயல்படுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 வெற்றியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்றிதழையும், நினைவுப்பரிசையும் வழங்கி பாராட்டினார்.

சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரிடம் இருந்து அரவிந்த் ராதாகிருஷ்ணன் சான்றிதழ் பெற்றுக்கொண்டார்.


Related Tags :
Next Story