ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்
ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று மருந்தாளுனர்களுக்கு, டீன் வள்ளி சத்தியமூர்த்தி அறிவுறுத்தினார்.
ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று மருந்தாளுனர்களுக்கு, டீன் வள்ளி சத்தியமூர்த்தி அறிவுறுத்தினார்.
மருந்தாளுனர் தின விழா
சேலம் மாவட்ட அரசுத்துறை மருந்து கிடங்கு அலுவலர்கள், தலைமை மருந்தாளுனர்கள், மருந்தாளுனர்கள் சார்பில் உலக மருந்தாளுனர் தின விழா நேற்று நடந்தது.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த விழாவுக்கு அரசு ஆஸ்பத்திரி மருந்தாளுனர் கிரிராஜன் தலைமை தாங்கினார். அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் தனபால், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிகண்டன் வரவேற்று பேசினார்.
கவனமாக செயல்பட...
அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு பணி கிடைப்பது அரிது. அதுவும் மருந்தாளுனர் பணி என்பது மிகவும் அரிது. காரணம் இந்த பணி மக்களுக்கு சேவை செய்யும் மிக முக்கிய பணியாகும்.. எனவே மருந்தாளுனர் பணியை அனைவரும் சிறப்பாக செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். மருந்து, மாத்திரைகள் மாற்றிக்கொடுத்தால் அபாயகரமான நிகழ்வு ஏற்படும். மாத்திரை வழங்கும் முன்பு அதை ஒரு முறைக்கு 3 முறை பார்த்து, சரியானதா?, காலாவதியாகாததா? என சரி பார்க்க வேண்டும்.
கல்வி அறிவு இல்லாதவர்கள், முதியவர்கள் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள். எனவே நோயாளிகளிடம் மருந்தாளுனர்கள் கனிவாக பேசி அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநகர நல அலுவலர் யோகானந், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நளினி, குடும்ப நல துணை இயக்குனர் வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மருந்தாளுனர் கேசவமூர்த்தி நன்றி கூறினார்.