இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தயார்


இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தயார்
x

நாகை மாவட்ட நிர்வாகம் இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் கூறினார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட நிர்வாகம் இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் பேசிய போது கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழையால் இயல்பான மழை கிடைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.

புயல் பாதுகாப்பு மையங்கள்

அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 12 புயல் பாதுகாப்பு மையங்களும், 5 பல்நோக்கு பேரிடர் மையங்களும் ஆய்வு செய்து அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா ? என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான 4700 மணல் மூட்டைகள், 65,000 சாக்குகள்,, 20 யூனிட் மணல், சவுக்கு மரங்கள், மின்சாதன உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பான இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில்...

நாகை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் 1077 என்ற கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண்ணை பேரிடர் காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பணிகள் குறித்து தீயணைப்பு துறை, காவல்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த மீட்பு உபகரணங்களையும், துறைவாரியாக வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இதில்மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, பேரிடர் மேலாண்மை தாசில்தார் ரமாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story