தர்மபுரி உழவர் சந்தையில் பீன்ஸ் விலை வீழ்ச்சிவரத்து அதிகரிப்பால் கிலோவுக்கு 21 ரூபாய் குறைந்தது


தர்மபுரி உழவர் சந்தையில் பீன்ஸ் விலை வீழ்ச்சிவரத்து அதிகரிப்பால் கிலோவுக்கு 21 ரூபாய் குறைந்தது
x
தினத்தந்தி 13 July 2023 7:30 PM GMT (Updated: 13 July 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி உழவர் சந்தைக்கு பீன்ஸ் வரத்து அதிகரிப்பு காரணமாக விலை வீழ்ச்சியடைந்தது. நேற்று ஒரு கிலோவிற்கு ரூ.21 குறைந்தது.

நார்ச்சத்து உள்ள பீன்ஸ்

சாம்பார், கூட்டு பொரியல் என அனைத்து வகை உணவுகளும் தயாரிக்க பயன்படும் முக்கிய காய்கறிகளில் ஒன்றாக விளங்கும் பீன்ஸ் தமிழ்நாட்டில் குளிர்ச்சியான மலைப்பிரதேசங்கள் மற்றும் சமவெளி பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பீன்ஸ் நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறி வகைகளில் ஒன்றாக இருப்பதாலும், அதிக சுவை கொண்டதாக விளங்குவதாலும் பெரும்பாலான பொதுமக்கள் பீன்ஸை விரும்பி சாப்பிடுகிறார்கள். துரித உணவு தயாரிப்பில் பீன்ஸ் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

ரூ.21 விலை குறைந்தது

கோடை வெயிலின் தாக்கம் 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்ததால் கடந்த சில வாரங்களில் பீன்ஸ் உற்பத்தி குறைவாக இருந்தது. இதனால் சந்தைகள் மற்றும் கடைகளுக்கு பீன்ஸ் வரத்து வழக்கத்தை விட குறைந்ததால் அதன்விலை கிலோ ரூ.120 வரை அதிகரித்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வரத்து சற்று அதிகரித்ததால் பீன்ஸ் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.96-க்கு விற்பனையான பீன்ஸ் நேற்று ஒரே நாளில் ஒரு கிலோவிற்கு ரூ.21 குறைந்தது. பீன்ஸ் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக சந்தைக்கு அதன்வரத்து கணிசமாக அதிகரித்ததால் அதன்விலை கணிசமாக வீழ்ச்சி அடைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.75-க்கு விற்பனை ஆனது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.85 முதல் ரூ.90 வரை பல்வேறு விலைகளில் பீன்ஸ் விற்பனை செய்யப்பட்டது.


Next Story