கூடலூரில் போலீஸ் நிலைய வளாகத்தில் கரடி உலா


கூடலூரில் போலீஸ் நிலைய வளாகத்தில் கரடி உலா
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:46 PM GMT)

கூடலூரில் முதன் முறையாக தாலுகா அலுவலகம், போலீஸ் நிலைய பகுதியில் கரடி நடமாடியது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நீலகிரி


கூடலூர்


கூடலூரில் முதன் முறையாக தாலுகா அலுவலகம், போலீஸ் நிலைய பகுதியில் கரடி நடமாடியது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


நகருக்குள் வரும் காட்டு யானைகள்


கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் வருகிறது. சில சமயங்களில் நகரப் பகுதிக்குள் வந்து செல்கிறது. கூடலூர் பழைய பஸ் நிலையம், ராஜகோபாலபுரம், நகராட்சி அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, துப்புக்குட்டி பேட்டை, புஷ்பகிரி, 1-ம் மைல் உள்ளிட்ட இடங்களில் காட்டு யானைகள் வந்து செல்கிறது.


இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் காலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து விட்டது. கோடை காலத்தில் காட்டெருமைகள் தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் வருகிறது. இதேபோல் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி பகுதியில் இரவு கரடி மற்றும் சிறுத்தை புலி நடமாட்டங்கள் அடிக்கடி தென்படுகிறது.


முதன்முறையாக கரடி



இந்த நிலையில் கூடலூர் தாலுகா அலுவலகம் மற்றும் போலீஸ் நிலைய பகுதியில் முதன் முறையாக கரடி நடமாட்டம் உள்ளது. நேற்று அதிகாலை ஒரு மணிக்கு டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில தாலுகா அலுவலகம் மற்றும் போலீசின் நிலைய பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது பிஎஸ்என்எல் அலுவலகம் பகுதியில் இருட்டுக்குள் இருந்து கரடி ஒன்று வெளியே வருகிறது,


தொடர்ந்து சாலையில் நடந்தபடி சாப்பிடுவதற்கு உணவு கிடைக்குமா என தேடியவாறு தாலுகா அலுவலகம் முன்பு வந்தது. பின்னர் போலீசின் நிலையம் முன்பு வந்த கரடி இரும்பு கதவு மீது ஏறியது. பின்னர் போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்தது. இதைக் கண்ட போலீசார் போலீஸ் ஸ்டேஷன் அறைக்கதவை மூடினர். ஸ்டேஷனுக்குள் அங்கும் இங்குமாக கரடி நடமாடியவாறு இருந்தது. பின்னர் எந்த திசை வழியாக வெளியே சென்றது என தெரியவில்லை.


இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே இதுவரை இல்லாத வகையில் கூடலூர் போலீஸ் நிலைய பகுதியில் கரடி நடமாடுவதால் பொதுமக்கள் இரவில் கவனமுடன் செல்ல வேண்டுமென போலீசார் எச்சரித்துள்ளனர்.






Next Story