நடுரோட்டில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை
நடுரோட்டில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தேவகோட்டை
நடுரோட்டில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆட்டோ டிரைவர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அழகாபுரி நடுத்தெருவை சேர்ந்தவர், வெங்கடாசலம். இவருடைய மகன் சரவணன் (வயது 36). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஜெகதீசுவரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சரவணன் ஆட்டோ சவாரிக்காக நேற்று மாலை கண்டதேவி சாலையில் வாரச்சந்தைக்கு சென்று கொண்டிருந்தார். திடீரென ஆட்டோவை நிறுத்தியதால், பின்னால் வந்த தேவகோட்டை அருணகிரிபட்டினம் ஜெயபாண்டி (44) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோவில் மோதியதாகவும், அதில் அவர் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது..
அடித்துக்கொலை
இதனால் ஜெயபாண்டி ஆத்திரம் அடைந்து, ஆட்டோ டிரைவர் சரவணனை சரமாரியாக அடித்து உதைத்தார். இதைத்தொடர்ந்து ஜெயபாண்டியின் உறவினர் மெக்கானிக் பழனியப்பனும் (40) அங்கு வந்தார். இருவரும் சேர்ந்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சரவணன் பலியானார்.
இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரித்து, 2 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார். தேடப்படும் ஜெயபாண்டி ஏற்கனவே சிங்கப்பூரில் வேலை பார்த்து ஊருக்கு வந்துவிட்டு நேற்று இரவு மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. தலைமறைவான ஜெயபாண்டி வெளிநாட்டுக்கு தப்பி விடாமல் இருக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொலையான ஆட்டோ டிரைவர் சரவணன் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ ஓட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.