மூதாட்டி கட்டையால் அடித்துக் கொலை


மூதாட்டி கட்டையால் அடித்துக் கொலை
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் திருட வந்த கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

ராமநாதபுரம்

தொண்டி,

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் திருட வந்த கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மூதாட்டி பிணம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தெற்கு தளிர் மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல். இவருடைய மனைவி ஜெயசீலி (வயது 75). இவர்களுடைய பிள்ளைகளுக்கு திருமணமாகி தனியாக வசிக்கின்றனர்.

கணவர் இறந்துவிட்ட நிலையில், புதுக்குடி கண்மாய் அருகே உள்ள வீட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயசீலி தனியாக வசித்து வந்தார். நேற்று காலை அவருடைய மகன் குமார், தாயாரை பார்க்க வந்தார். அப்போது வீட்டு வாசலில் ஜெயசீலி, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அறிந்ததும் ராமநாதபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண், மதுவிலக்கு துணை சூப்பிரண்டு ராஜூ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ராமநாதபுரம் டி.ஐ.ஜி. துரை நேரில் விசாரணை நடத்தினார்.

அடித்துக்கொலை

ஜெயசீலியின் உடலை பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் கூறும்போது, "ஜெயசீலி 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக அவர் வீட்டின் முன்பு கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து திருட முயன்றிருக்கலாம். அல்லது, ஆடுகளை திருட முயன்று இருக்கலாம். அந்தநேரம் விழித்துக்கொண்ட ஜெயசீலி அவர்களை தடுக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் அவரை கட்டையால் அடித்து கொலை செய்திருக்கலாம்" என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story