அழகாக சிந்திப்பவர்கள் தலைசிறந்த தலைவர்களாக மாறுகிறார்கள்


அழகாக சிந்திப்பவர்கள் தலைசிறந்த தலைவர்களாக மாறுகிறார்கள்
x

அழகாக சிந்திப்பவர்கள் தலைசிறந்த தலைவர்களாக மாறுகிறார்கள் என்று வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

திருப்பத்தூர்

ஆசிரியர்களுக்கு பயிற்சி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது:-

ஒரு நாடு வல்லரசு நாடாக மாற வேண்டும் என்றால் கண்டுபிடிப்புகள் அதிகமாக இருக்க வேண்டும். பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்கின்ற பொழுது நிறைய கேள்வி எழுப்புங்கள். ஆசிரியர்களை கண்டு பயப்படாதீர்கள்.

மாணவர்களை கேள்வி கேட்க வேண்டும் என்று ஊக்கப்படுத்த வேண்டும். கேள்வி கேட்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. என்ன விடை வேண்டும் என்று அறிந்தவன்தான் வினாக்களை தொகுக்க முடியும்.

தலைவர்களாக...

கல்வியின் அடிப்படை நோக்கம் சிந்தனை செய்ய கற்றுக்கொடுப்பதுதான். அழகாக சிந்திப்பவர்கள் தலைசிறந்த தலைவர்களாக மாறுகிறார்கள். மிகச்சிறந்த தலைவர்கள் நாட்டையே வழி நடத்துவார்கள். கல்வியின் நோக்கம் மதிப்பெண் எடுப்பது மட்டுமல்ல, சிந்திக்க கற்றுக்கொள்வது. கல்வி தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் நமக்கு கொடுக்கும்,

நீங்கள் மாணவர்களை மட்டும் உருவாக்க வில்லை. அறிவியல் அறிஞர்களையும் உருவாக்குகிறீர்கள். அறிவியல் அறிஞர்களை உருவாக்குவதன் மூலமாக இந்த நாட்டினை பெருமை அடைய செய்யக்கூடும். எனவே நல்ல அறிவியல் அறிஞர்களை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் குணசேகரன், சுப்பிரமணி, அச்சுதன், ஜெயசுதா, இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செண்பகவல்லி, கல்லூரி முதல்வர் இன்பவள்ளி, ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story