பெரியகுளத்தில் அசாதாரணமான சூழல் நிலவுவதால்பொதுத்தேர்வு எழுத முடியாமல் மாணவ, மாணவிகள் தவிப்பு:நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
பெரியகுளத்தில் அசாதாரணமான சூழல் நிலவுவதால் பொதுத்தோ்வு எழுத முடியாமல் மாணவ, மாணவிகள் தவிப்பதால் நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில் மக்கள் சிலர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'பெரியகுளத்தில் கடந்த 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதத்தின் காரணமாக தென்கரை பேரூராட்சி மற்றும் தாமரைக்குளம் பேருராட்சி பகுதியில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் கைது நடவடிக்கை என்ற பெயரில் போலீசாரின் அச்சுறுத்தல் காரணமாக டி.கள்ளிப்பட்டி மற்றும் தாமரைகுளம் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக சென்று வர முடியாத சூழல் உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று வர பஸ் வசதியில்லாமல் அவர்கள் பொதுத் தேர்வு எழுத முடியாத சூழல் உள்ளது. பொதுமக்கள், பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் நலனை கருத்தில் கொண்டு டி.கள்ளிப்பட்டி மற்றும் தாமரைகுளம் பகுதிகளில் போலீஸ் துறையினரால் பொதுமக்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் இருக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.