சிறுவனை போலீசார் தாக்கியதால்சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
வீரபாண்டியில் சிறுவனை போலீசார் தாக்கியதால் சாலையில் படுத்து பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி நதியா. நேற்று முன்தினம் இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீரபாண்டி கோவில் திருவிழாவிற்கு வந்தனர். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு புறப்பட்டார். இதற்காக இரவு 11½ மணி அளவில் பஸ் ஏறுவதற்காக வடக்கு பஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது பஸ் ஒன்று வந்தது. இதைக்கண்டதும் பொதுமக்கள் போட்டி போட்டு அந்த பஸ்சில் ஏற முயன்றனர். கார்த்திக்கின் குடும்பத்தினரும் அந்த பஸ்சில் ஏறினர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்கள் கூட்டமாக பஸ்சில் ஏறியதால் அவர்களை கட்டுப்படுத்த சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கார்த்திக்கின் சகோதரி மகனான சிறுவன் தர்ஷன் உடலில் போலீசார் தாக்கியதில் ஊமைக்காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து நதியா போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் பயணிகளுடன் அங்கு வந்த பஸ்சின் முன்பு சாலையில் நதியா படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சம்பந்தப்பட்ட போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறினார். இதையடுத்து பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த அவர் அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.