டாஸ்மாக் கடைகளில் `பீர்' தட்டுப்பாடு
தர்மபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் `பீர்' தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் கடந்து சில நாட்களாக பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பகல் நேரங்களில் மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் பீர் கேட்டு தகராறு செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் முன் பீர் இருப்பு இல்லை என்று அட்டையில் எழுதி தொங்க விட்டிருந்தனர். எனினும் கடைக்கு வந்த மதுப்பிரியர்கள் பீர் கேட்டு தொடர்ந்து தகராறு செய்தனர். பீர் வினியோகம் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். பீர் பாட்டில்கள் மொத்தமாக வாங்கி சென்று கள்ள சந்தையில் விற்பனை செய்கிறார்கள் என்று மதுப்பிரியர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இதனால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பீர் கேட்டு வாக்குவாதம் நடந்தது.