அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதற்கு முன் ஓ.பன்னீர்செல்வம் விலகிக்கொள்ள வேண்டும்-ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி


அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதற்கு முன்   ஓ.பன்னீர்செல்வம் விலகிக்கொள்ள வேண்டும்-ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி
x

“அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதற்கு முன் ஓ.பன்னீர்செல்வம் விலகிக்கொள்ள வேண்டும்,” .என்று நேற்று அளித்த பேட்டியில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

"அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதற்கு முன் ஓ.பன்னீர்செல்வம் விலகிக்கொள்ள வேண்டும்," .என்று நேற்று அளித்த பேட்டியில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

ஒற்றை தலைமை

மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுக்கு திறமையான, வலிமையான, தி.மு.க.வை எதிர்க்கும் சக்தியாக, உண்மை உணர்வு கொண்ட ஒற்றை தலைமை வேண்டும். இது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஒற்றை தலைமைக்கு நல்ல சூழ்நிலை உருவாகி உள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் 95 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிப்பதால் வருகிற 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நாங்கள் அன்பு, பண்பு, பாசம் கொண்டவர்கள்தான். ஆனால் அவர் தவறான முடிவு எடுக்கும்போது அதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டு உள்ளோம்.

அ.தி.மு.க. தோல்விக்கு காரணமானவர்

ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து தேனிக்கு சுயநல பயணம் சென்றார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தனது தொகுதியிலும் மதுரை கிழக்கு தொகுதியிலுமாக பிரசாரம் செய்தார். அதை தவிர மற்ற தொகுதியில் பிரசாரம் செய்யவில்லை. பிரசாரம் செய்யவும் அவர் திட்டமிடவில்லை. தென்மாவட்டத்தில் அ.தி.மு.க. தோல்விக்கு அவரே காரணம். 3 முறை முதல்-அமைச்சராக இருந்து விட்டு தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை.

தென் மாவட்டங்கள் அ.தி.மு.க. கோட்டை. இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் தன்னை மட்டும் சுயநலமாக பெரிய தலைவர் போன்ற மாயையை உருவாக்கி கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வில் சாதி, மதத்திற்கு இடம் இல்லை. ஓ,பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க. தொண்டர்களிடம் ஆதரவு இல்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலிலதா உள் அறையில் தனியாக ஒருவரை வாழ்த்தினால்தான் உண்மையான பாராட்டு.

பொது மேடைகளில் ஜெயலலிதா ஒருவரை பாராட்டினார் என்றால் அது பாராட்டு அல்ல. சேடபட்டி முத்தையா, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்களை மேடையில் ஜெயலலிதா பாராட்டினார். அடுத்த சில மாதங்களில் பாராட்டு பெற்றவர்கள் கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டனர்.

விலகிக்கொள்ள வேண்டும்

அதேபோல்தான் ஓ.பன்னீர்செல்வமும் பாராட்டை பெற்றுள்ளார். ஜெயலலிதா எங்களை பல்வேறு முக்கிய தருணங்களில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சொல்லி இருக்கிறார்.

சுயநலம் கொண்ட, திறமை இல்லாத ஓ.பன்னீர்செல்வத்தால் கட்சியை காப்பாற்ற முடியாது. அவருக்கு எதிராக எந்த சதிவலையும் பின்னப்படவில்லை. அவரை எங்கும் அவமதிக்கவில்லை. அனுதாபம் தேடுவதற்காக ஓ.பன்னீர்செல்வம், கண்ணீர் செல்வமாக உள்ளார்.

அவருடைய மகன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கக்கூடிய அவலம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அவர் கட்சியையும், கட்சி தொண்டர்களையும் ஒருங்கிணைக்காதவராக இருந்தார்.

கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன் ஓ.பன்னீர்செல்வம் விலகிக்கொள்ள வேண்டும். அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை பிரச்சினைக்கும், பா.ஜ.க.வுக்கும் சம்பந்தம் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது பெரியபுள்ளான் எம்.எல்.ஏ, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இளைஞரணி பகுதி செயலாளர் பாலா, துணைச் செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் எம்.ஆர்.குமார், மகாராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

========


Related Tags :
Next Story