கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்த பெல் மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள்


கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்த பெல் மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள்
x

கருப்பு பட்டை அணிந்து பெல் மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்தனர்.

திருச்சி

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் பகுதியில், மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ உதவி வழங்கும் வகையில் பெல் குடியிருப்பு வளாகத்தில் பெல் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள், லேப்-டெக்னீசியன் உள்பட சுமார் 150 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து சம்பந்தப்பட்ட நிறுவனம் முறையாக சம்பளம் வழங்கவில்லை என்றும், சுமார் 4 மாதத்திற்கு மேல் சம்பளம் பாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஒப்பந்த தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தாமல் உள்ளதாகவும், இது குறித்து ஒப்பந்த பணியாளர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகம், திருச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் என பலரிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பள பாக்கியை வழங்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி நேற்று முன்தினம் திருச்சி பெல் மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் நர்சுகள் உள்ளிட்டோர் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர். தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் அவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர். இது குறித்து அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் நர்சுகள் மற்றும் ஊழியர்கள் கூறுகையில், முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் கருணைத் தொகை, பிடித்தம் செய்யப்படும் தொகையை முறையாக வங்கியில் செலுத்தாமல் இருக்கின்றனர். இதனால் எங்களது வாழ்வு கேள்விக்குறியான நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளோம், என்றனர்.

1 More update

Next Story