முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை கிடைக்காத பயனாளிகள் 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை கிடைக்காத பயனாளிகள் 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் 1997 முதல் 2001-ம் ஆண்டு வரை பதிவு செய்து, 18 வயது நிரம்பிய முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகளுக்கு முதிர்வுத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இத்திட்டத்தில் பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகள், உரிய ஆவணங்களான, வைப்புநிதிப்பத்திரம் அசல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பயனாளியின் வங்கிக்கணக்கு புத்தகம் நகல், பயனாளியின் (தாய் மற்றும் மகள்) புகைப்படம் ஆகியவைகளுடன், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்களிடம், வருகின்ற 25-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.