அழிவுப்பாதையில் வெற்றிலை விவசாயம்


அழிவுப்பாதையில் வெற்றிலை விவசாயம்
x
தினத்தந்தி 11 Nov 2022 7:30 PM GMT (Updated: 11 Nov 2022 7:30 PM GMT)

ஆத்தூர் பகுதியில் அழிவுப்பாதையை நோக்கி பயணிக்கும் வெற்றிலை விவசாயத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம்

ஆத்தூர்:-

ஆத்தூர் பகுதியில் அழிவுப்பாதையை நோக்கி பயணிக்கும் வெற்றிலை விவசாயத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

வெற்றிலை சாகுபடி

திருமணம் உள்பட அனைத்து விசேஷங்களுக்கும் வெற்றிலையின் பங்கு இன்றியமையாதது. அதே போல கோவில் பூஜையிலும் வெற்றிலை இடம்பெறுவது உண்டு. பல்வேறு நோய்களுக்கு வெற்றிலை அருமருந்தாகவும் உள்ளது. மேலும் வெற்றிலை பயிரிடப்படும் தோட்டங்களுக்கு செல்ல விவசாயிகள் கட்டுப்பாடுகள் விதித்து இருந்தனர். அதில் காலணி அணிந்து கொண்டு வெற்றிலை தோட்டங்களுக்கு செல்லக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆத்தூர் பகுதியில் நரசிங்கபுரம், பெத்தநாயக்கன்பாளையம், புத்திர கவுண்டம்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், வாழப்பாடி, கொட்டைவாடி ஆகிய பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. பின்னர் அவற்றை விவசாயிகள் அறுவடை செய்து ஆத்தூர் வெற்றிலை மார்க்கெட்டுக்கு வந்து விற்பனை செய்கிறார்கள்.

அழிவுப்பாதை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆத்தூர் பகுதியில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போது 150 ஏக்கராக குறைந்து விட்டது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது வெற்றிலை சாகுபடிக்கு ஆகும் செலவை விட, வருமானம் குறைவாக உள்ளது தான் என்கிறார்கள் விவசாயிகள்.

இதனால் ஆத்தூர் பகுதியில் வெற்றிலை விவசாயம் அழிவுப்பாதையில் பயணிக்கிறது. எனவே இந்த விவசாயத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து விவசாயிகள், வியாபாரிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்...

கருப்பு பூஞ்சை

ஆத்தூர் கோட்டை பகுதியில் வெற்றிலை பயிரிடும் விவசாயிகர்ணன்:- இந்தபகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்த அந்த வெற்றிலை விவசாயம் தற்போது சுருங்கி சுமார் 150 ஏக்கர் நிலங்களில் மட்டுமே விவசாயம் செய்யும் நிலை உள்ளது. வெற்றிலை கொடிகளில் அடிக்கடி கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதால், வெற்றிலை உற்பத்தி அடியோடு பாதிக்கிறது. பயிரிடும் செலவு, மருந்து மற்றும் இதர செலவுகள் அதிகமாக உள்ளதால், வெற்றிலை பயிரிடுவது லாபத்தை தருவது இல்லை. இதனால் விவசாயிகள் பலர் வெற்றிலை சாகுபடிைய கைவிட்டு வருகிறார்கள். எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வெற்றிலை விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.

விவசாயி செந்தில்குமார்:-வெற்றிலை கொடிக்கால் பகுதியை நாங்கள் குழந்தையை பராமரிப்பது போல பராமரித்து வருகிறோம். ஆனால் எதிர்பார்த்த வருமானம் இல்லை இருந்தாலும் தொடர்ந்து செலவு செய்து வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். பல்வேறு நோய்கள் வெற்றிலையை தாக்கி முழுமையான வெற்றிலையை அறுவடை செய்ய முடியாமல் போகிறது. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வெற்றிலை விவசாயத்தையும், அதனை நம்பி உள்ள விவசாயிகள், தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டும்.

வெளிமாநிலங்கள்

ஆத்தூர் வெற்றிலை வியாபாரிகதிர்வேலு:-

கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிலை வியாபாரம் செய்து வருகிறேன். தற்போது சுருட்டை மற்றும் மருட்டு நோய் தாக்கி வெற்றிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு வந்த வெற்றிலை சாகுபடி தற்போது மிகவும் குறைந்து விட்டது. மேலும் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. நாங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை, அகமதாபாத், லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு லாரிகள் மூலமும், ெரயில் மூலமும் வெற்றிலையை அனுப்பி வந்தோம். ஆனால் தற்போது வெற்றிலை உற்பத்தி குறைவால் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. ஆத்தூர் நரசிங்கபுரத்தில் 20-க்கும் மேற்பட்ட வெற்றிலை மண்டிகள் இயங்கி வந்த நிலையில் தற்போது 2 வெற்றிலை மண்டிகள் மட்டுமே இயங்கி வருகிறது. 100 வெற்றிலை கொண்ட ஒரு கவுளி தற்போது ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. விஷேச நாட்களில் இந்த விலை சற்று அதிகரித்து இருக்கும். ஆனால் வரத்து எதிர்பார்த்த அளவு இருப்பது இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் சில விவசாயிகள், வியாபாரிகள் கூறும் போது, ஆத்தூர் வெற்றிலை மார்க்கெட்டுக்கு விவசாயிகளிடம் இருந்து சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே நஷ்டமாக உள்ளதால், விவசாயிகளிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.


Next Story