"கொரோனா அதிகரிப்பதால் பூஸ்டர் டோஸ் செலுத்துவது நல்லது" - சென்னை மாநகராட்சி மேயர் பிரியா
2 டோஸ் செலுத்தியவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது நல்லது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது நல்லது என்று தெரிவித்தார்.
இன்றைய தினம் ஒரு வார்டில் ஆயிரம் பேர் என்ற அடிப்படையில் மொத்தம் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், முதல் டோஸ் தடுப்பூசியை 99 சதவீதம் பேரும், 2-வது டோஸ் தடுப்பூசியை 85 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களிடம் வீடு, வீடாக சென்று அறிவுறுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 2 டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.