சென்னிமலை- காங்கேயம் இடையே புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
சென்னிமலை- காங்கேயம் இடையே புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தொிவித்து கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா்
சென்னிமலை- காங்கேயம் இடையே புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
புறவழிச்சாலை
ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு, சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி, திருவள்ளுவர் நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்,மாணவ- மாணவிகளுடன் திரண்டு வந்து, கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
நாங்கள் மேற்கண்ட முகவரியில் 3 தலைமுறையாக வசித்து வருகிறோம். சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் புறவழிச்சாலை போடப்பட உள்ளது. இதற்காக பசுவப்பெட்டி, திருவள்ளுவர் நகர் வழியாக நில அளவை பணிகள் நடைபெறுகிறது.
பாதிப்பு
இந்த வழியாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் திருவள்ளுவர் நகர், கே.சி.நகர், காமராஜர் நகர், தட்டங்காடு ஆகிய 4 கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இந்த பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. நாங்கள் அனைவரும் தினக்கூலி என்பதால் எங்களுக்கு வேறுஎங்கும் இடம் கிடையாது. எனவே நாங்கள் தொடர்ந்து இங்கு வசிக்க வழிவகை செய்ய வேண்டும். இதையும் மீறி எங்கள் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் எங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை திரும்ப ஒப்படைத்து விடுவோம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.