பெரியகுளத்தின் கரைகளுக்கு இடையேகம்பி மேல் சாகச சைக்கிள் சவாரி
தமிழ்நாட்டில் முதல்முறையாக உக்கடம் பெரிய குளத்தின் கரைகளுக்கு இடையே கம்பி மேல் சாகச சைக்கிள் சவாரி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக உக்கடம் பெரிய குளத்தின் கரைகளுக்கு இடையே கம்பி மேல் சாகச சைக்கிள் சவாரி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
சாகச சைக்கிள் சவாரி
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள உக்கடம் பெரியகுளத்தின் கரைப்பகுதியில் அழகிய பூங்கா, அலங்கார விளக்குகள், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், மிதக்கும் நடைபாதை, உணவகங்கள், சைக்கிள் பயணத்திற்கு தனிப்பாதை, பார்வையாளர் மாடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் பொதுமக்களை மேலும் கவரும் வகையில் உக்கடம் பெரிய குளத்தின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்லும் வகையில் ஜிப் லைன், ஜிப் சைக்கிள் லைன் கம்பிகளால் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் தொங்கியபடி பயணிப்பது மற்றும் சைக்கிளில் சவாரி என 2 விதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சோதனை ஓட்டம்
அதில் உக்கடம் பெரியகுளத்தின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு கம்பியில் தொங்கியபடி அல்லது சைக்கிளில் சவாரி செய்தபடி இயற்கை அழகை ரசிக்கலாம். இதற்கான சோதனை ஓட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியதாவது:-
கோவை மக்களுக்கு பொழுதுபோக்கு மையங்கள் குறைவாக உள்ளன. எனவே குளங்கள் மேம்படுத்தப்பட்டு பல்வேறு வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரூ.62.17 கோடியில் உக்கடம் பெரிய குளம் புனர மைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
200 மீட்டர் நீளம்
அதன் ஒரு பகுதியாக உக்கடம்-செல்வபுரம் சாலையில் உள்ள பெரிய குளத்தின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு 200 மீட்டர் நீளத்தில் கம்பியில் பல்வேறு பாதுகாப்பு வசதியுடன் தனி ஆளாக சாகச சவாரி செல்லும் வகையிலான ஜிப் லைன் என்ற சாகச விளையாட்டு மற்றும் சைக்கிளில் அமர்ந்தபடி சாகச பயணம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.
அதில் ஒரே நேரத்தில் ஜிப் லைன் மற்றும் ஜிப் சைக்கிளில் தலா 3 பேர் வரை சென்று வர முடியும். இதற்காக குளக்கரை யின் இருபுறத்திலும் 50 அடி உயரத்துக்கு இரும்பினால் ஆன ராட்சத டவர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 50 அடி உயரத்துக்கு 6 இரும்புக்கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. இதற்கான கட்டணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் முதன்முறை
இன்று (நேற்று) சாகச சைக்கிள் பயணம் மற்றும் ஜிப் லைன் பயணம் செய்யும் சோதனை ஓட்டம் வெற்றிகராக நடந்தது. இதன் மூலம் குளக்கரையில் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு சாகசம் பயணம் சென்று வரலாம்.
இந்த ஜிப் சைக்கிள், ஜிப் லைன் வசதி தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் கொண்டு வரப்பட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.