பாதூர் அய்யனார் கோவில் திருவிழாஏராளமான பக்தர்கள் தரிசனம்
பாதூர் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனா்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் புகழ்பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பாரி அடிக்கும் திருவிழா நடப்பது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினசரி காலை, மாலை நேரங்களில் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மலர்களால் அலங்கரித்த குதிரை வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பாரியடித்தல் விழா நேற்று நடைபெற்றது. அப்போது அய்யனாருக்கு முன்பாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புறவை குதிரை ஒன்று புறப்பட்டது.
அதை தொடர்ந்து, அய்யனார் தனது குதிரை வாகனத்தில் மலர்களால் அலங்கரித்து பாரி அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது கோவிலில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புறவை குதிரையும், மற்றொரு குதிரை வாகனத்தில் அய்யனாரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெள்ளோட்டமாக ஓடி வந்து ஏரிக்கரையில் பாரியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆவேசமாக ஓடி துள்ளிக்குதித்து விளையாடினர்.
அப்போது, ஏராளமான பக்தர்கள் வேண்டுதலின் பேரில் பணம், தானியம், காய்கறிகள் உள்ளிட்டவற்றை சூறையிட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
இந்த திருவிழாவில் பாதூர், காந்திநகர், செங்குறிச்சி, வண்டிபாளையம், சின்னகுப்பம், சேந்தமங்கலம் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.