கடையத்தில் பாரதி, செல்லம்மாள் சிலையுடன் கற்றல் கல்வி மைய கட்டிடம்- சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்


கடையத்தில் பாரதி, செல்லம்மாள் சிலையுடன் கற்றல் கல்வி மைய கட்டிடத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்

தென்காசி

கடையம்:

கடையத்தில் பாரதி, செல்லம்மாள் சிலையுடன் கற்றல் கல்வி மைய கட்டிடத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

மையம்

பாரதியார் மனைவி செல்லம்மாளின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையத்தில் செல்லம்மாள் பாரதி மையம் அமைக்க சேவாலயா அறக்கட்டளை நிறுவனர் முரளிதரன் மற்றும் நிர்வாக கமிட்டியினர் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து பாரதியார் பெயரில் கடையத்தில் இயங்கி வந்த நூலக கட்டிடத்தை புதுப்பித்து அங்கு செல்லம்மாள் பாரதி மையம் மற்றும் முழு உருவச்சிலையும் அமைத்து தருவதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் கோரியதையடுத்து நூலகத்துறை அனுமதி வழங்கியது.

திறப்பு விழா

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு கற்றல் கல்வி மையம் பணிகள் தொடங்கியது. ரூ.2 கோடியில் நடைபெற்ற இந்த கட்டிட பணிகள் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று செல்லம்மாள் பாரதியாரின் 125-ஆண்டு திருமண நாளில் இருவரின் உருவச்சிலையோடு அமைக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிறுவனர் முரளிதரன் வரவேற்றார். தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு உருவச்சிலை, கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

சிலையுடன் கட்டிடத்தை தமிழக முதல்-அமைச்சர் திறந்து வைக்க இருந்த நிலையில் அவர் வரமுடியாத காரணத்தினால் நான் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பெருமைக்குரியது

முதல்-அமைச்சர், சுதந்திர போராட்ட வீரர்களை எவ்வாறு கவுரவிக்க வேண்டும் என்பதை அறிவார். எட்டயபுரத்தில் பாரதியாரின் வீட்டை நினைவு சின்னமாக்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதியாரின் நினைவு நாளை அரசு சார்பில் கொண்டாடுவதாக அறிவித்திருக்கிறார்.

மகாகவி பிறந்தநாள் அன்று சிறந்த எழுத்தாளர்களுக்கு ரூ.1 லட்சம், பொற்கிழி வழங்கி கவுரவப்படுத்தி வருகிறார். இந்தியாவில் உள்ள முதல்-அமைச்சர்களில் சிறந்த முதல்-அமைச்சராக அவர் திகழ்ந்து வருவது பெருமைக்குரியது ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் பொது நூலக இயக்குனர் இளம்பகவத், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரி அனந்தன், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாபன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், பாரதியாரின் உறவினர் கவிஞர் உமாபாரதி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள், கடையம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் புளி கணேசன், தெற்கு கடையம் பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி ராமதுரை மற்றும் தமிழ் ஆர்வலர்கள், நூலகர்கள், பொதுமக்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

சீர்வரிசை

விழாவையொட்டி பாரதி செல்லம்மாளின் 125-வது திருமண நாள் கொண்டாடப்பட்டது. இதற்காக தோரணமலை முருகன் கோவில் சார்பில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் சீர்வரிசை வழங்கினார்.

தோரணமலை பக்தர்கள் சீர்வரிசை தட்டை ஏந்தி வந்தனர். மேலும் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

மனு

பின்னர் சபாநாயகர் அப்பாவுவிடம், கடையம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் புளி கணேசன் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள், கடையம் யூனியனை தனி தாலுகாவாக மாற்ற வேண்டி மனு அளித்தனர்.

இதேபோல் கடையம் பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி ராம துரையும் தனி தாலுகா வேண்டி மனு கொடுத்தார்.


Next Story