பவானி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் பவானி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் பவானி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அம்மன் ஊர்வலம்
மேட்டுப்பாளையம் ஓடந்துறை பவானி ஆற்றின் கரையோர பகுதியில் மகாமக பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 48-ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி பொரி சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து குஞ்சப்பனை கோவிலில் இருந்து அக்னி கம்பம் எடுத்து வருதல், திருவிளக்கு பூஜை, கோத்தகிரி ரோடு முனியப்பன் கோவிலில் இருந்து பூச்சட்டி கரகத்துடன் பவானி அம்மனை கோவிலுக்கு அழைத்து வருதல், குண்டம் திறத்தல், பூ வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்லித்துறை ரோடு வீரமாஸ்தியம்மன் கோவிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க அம்மன் ஊர்வலம் காலை 7 மணிக்கு புறப்பட்டு, 9 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. அதன் பின்னர் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. கோவில் தலைமை பூசாரி ராஜேந்திரன் கையில் வேல் எடுத்து குண்டத்தை 3 முறை வலம் வந்து சிறப்பு பூஜை செய்து குண்டத்தில் மல்லிகை மலர்ச்செண்டை வீசி அருளுடன் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார்.
குண்டம் இறங்கினர்
இதைத்தொடர்ந்து ரவிக்குமார் கோலக்கூடை, சக்திகரகம் சுப்பிரமணி, சிவன் கரகம் பூபதி, யுவராஜ், சரத்குமார் ஆகியோர் சப்பரத்தில் உற்சவம் மூர்த்தியை எடுத்து குண்டம் இறங்கினார்கள். பின்னர் பக்தர்கள், கைக்குழந்தையுடன் பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம், மா விளக்கு எடுத்தல், அலகு குத்துதல், நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராடல், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மறு பூஜை உடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.