பவானி தினசரி மார்க்கெட்டுக்கு புதிய கட்டிடம் கட்ட தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவு


பவானி தினசரி மார்க்கெட்டுக்கு புதிய கட்டிடம் கட்ட தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவு
x

பவானியில் தினசரி மார்க்கெட்டுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கத்தினர் இன்று ஒருநாள் கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஈரோடு

பவானி

பவானியில் தினசரி மார்க்கெட்டுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கத்தினர் இன்று ஒருநாள் கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.

தினசரி மார்க்கெட்

பவானி தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும் இதற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்றபோது ஒரு தரப்பினர் தற்போது உள்ள இடத்திலேயே தினசரி மார்க்கெட் இருக்க வேண்டும் என்றனர்.

ஆனால் மற்றொரு தரப்பினர் மேட்டூர் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் தினசரி மார்க்கெட்டுக்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த பிரச்சினை கடந்த 3 மாதங்களாக இழுபறியாக உள்ளது.

ஆதரவு

இந்த நிலையில் மார்க்கெட்டுக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் புதிய தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 25 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க.வை சேர்ந்த 12 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்களும் என மொத்தம் 16 பேர் வாக்களித்தனர். 9 கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 16 கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் மார்க்கெட்டுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள் அனைவரும் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர்.

எதிர்ப்பு

மேலும் இந்த தீர்மானத்துக்கு தினசரி மார்க்கெட் காய் கனி வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக சங்கத்தின் தலைவர் டி.ஏ.மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story