நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை; பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு- வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் வருகிறது


நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை; பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு- வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் வருகிறது
x

நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வருகிறது.

ஈரோடு

பவானிசாகர்

நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வருகிறது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் நீர் வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. மேலும் கோயமுத்தூர் மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக திறக்கப்படும் தண்ணீரும், அணை நிரம்பிய பின் திறக்கப்படும் உபரி நீரும் மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆற்றின் மூலம் பவானிசாகர் அணையில் கலக்கிறது.

நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து உபரி நீராக பவானி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரத்து 450 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு ஆயிரத்து 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து பவானி ஆற்றில் வழியாக திறக்கப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு உபரிநீராக 4 ஆயிரத்து 450 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு ஆயிரத்து 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த மாதம் 5-ந் தேதி காலை 9 மணியில் இருந்து அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது.

1 More update

Next Story