ரூ.63½ லட்சத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
ரூ.63½ லட்சத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட மூலிமங்கலம் பிரிவு சாலை முதல் நாணப்பரப்பு பிரிவு சாலை வரை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.23 லட்சத்தில் 400 மீட்டர் தூரம் தார் சாலை, முல்லை நகர் பகுதியில் அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.25 லட்சத்தில் புதிதாக பூங்கா, டி.என்.பி.எல். சமுதாய கூடம் முதல் ஆத்திகாபள்ளம் வெள்ளதாரை வாய்க்கால் வரை நமக்கு நாமே திட்டத்தில் 2022-2023 நிதி ஆண்டில் ரூ.15 லட்சத்து 60 ஆயிரத்தில் மழை நீர் வடிகால் ஆகியவை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
இதேபோல் செம்மடைப் பகுதியில் ரூ.3½ லட்சத்தில் புதிய ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் மற்றும் குடிநீர் தொட்டி அமைத்து அதற்கான திறப்பு விழா, அண்ணாநகர் பகுதியில் ரூ.3½ லட்சத்தில் புதிய ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் மற்றும் குடிநீர் டேங்க் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் கனிராஜ் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ கலந்து கொண்டு மொத்தம் ரூ.63 லட்சத்து 60 ஆயிரத்தில் தொடங்கப்பட உள்ள திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீரை திறந்து வைத்தார். இதில், நகர் மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.