குண்டாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட பூமி பூஜை


குண்டாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட பூமி பூஜை
x

குண்டாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட பூமி பூஜையை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

விருதுநகர்

காரியாபட்டி,

குண்டாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட பூமி பூஜையை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

புதிய மேம்பாலம்

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பிசிண்டி அருகே குண்டாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. மழைக்காலங்களில் குண்டாற்றில் அதிக அளவு தண்ணீர் வரும்போது இந்த பாதை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

மழைகாலங்களில் காரியாபட்டியில் இருந்து கே.கரிசல்குளம், வடகரை, பிசிண்டி, அச்சங்குளம், மாந்தோப்பு உள்பட ஏராளமான கிராமங்களுக்கு மக்கள் சிரமத்துடன் சென்று வந்தனர். இதனால் குண்டாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள், அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் நெடுஞ்சாலை துறை மூலம் புதிய மேம்பாலம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து புதிய மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி பூமி பூஜை செய்து கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிசிண்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பாண்டி பெருமாள் முன்னிலை வகித்தார்.

நிதி ஒதுக்கீடு

நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த பகுதியில் நான் வாக்குசேகரிக்க சென்றபோது பொதுமக்கள் என்னிடம் பிசிண்டி குண்டாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தற்போது மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. மேம்பாலத்திற்காக பொதுமக்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் தங்கபாண்டியன், மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் கல்யாணி, பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பரபாரதி, சேகர், உமையீஸ்வரி ஜெயக்கண்ணன், மகாலட்சுமி முத்துக்குமார், ஒன்றிய துணைச்செயலாளர் கீழ உப்பிலிக்குண்டு குருசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story