கல்லூரி சாலை அமைக்க பூமிபூஜை
கல்லூரி சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது
தேவகோட்டை
திருச்சி-ராமேசுவரம் சாலையிலிருந்து சேவுகன் அண்ணாமலை கல்லூரி வழியாக புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காரைக்குடி-தேவகோட்டை சாலையை இணைக்கும் கல்லூரி சாலை மிக மோசமாக சேதமடைந்து இருந்தது. இது பற்றி தொடர்ந்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த சாலையை சீரமைத்தால் நகருக்குள் வாகனங்கள் எளிதாக வரவும் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கும் ஏதுவாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் இந்த சாலையை அமைக்க நடவடிக்கை எடுத்து, சாலையை சீரமைக்க ரூ.1.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் சாலை அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் திருச்சி-ராமேசுவரம் சாலையிலிருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வழியாக ராம் நகர் சாலை யூனியன் சாலையாக இருப்பதால் அந்த சாலையையும் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.