மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி வருகிற 15-ந்தேதி நடக்கிறது.
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை சார்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி வருகிற 15- ந்தேதி காலை 7 மணிக்கு நடத்தப்பட உள்ளது.
இந்த போட்டி 3 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கி, டி.ஐ.ஜி. பங்களா வழியாக திருச்செந்தூர் சாலையில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். அதேபோல் 4-வது முதல் 10-வது இடம் வரை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.250 வழங்கப்படும். இந்த போட்டிக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று கண்டிப்பாக வருகிற 13-ந்தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) நெல்லை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இந்தியாவில் தயாரான சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.