மாணவிகளுக்கு சைக்கிள்
மாணவிகளுக்கு சைக்கிள்
கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பூண்டி கலைவாணன் எம். எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கலந்துகொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரக பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சீருடை, பாடப்புத்தகங்கள், விலையில்லா சைக்கிள் என பல திட்டங்கள் அனைத்தும் கிராமப்புற பகுதிகளில் உள்ள மாணவ- மாணவிகள் சிறப்பான கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி படிப்பு பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா, தாசில்தார் குருமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.