ஸ்ரீபெரும்புதூர் அருகே தமிழ்நாடு சைக்கிள் லீக் போட்டி; அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார்
தமிழ்நாடு சைக்கிள் லீக் சார்பாக தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சைக்கிள் லீக் போட்டி நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டையில் அமைந்துள்ள சென்னை இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நிப்பான் பெயிண்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு சைக்கிள் லீக் சார்பாக தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சைக்கிள் லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் நம்ம சென்னை ரைடர்ஸ், மெட்ராஸ் ப்ரோ ரேசெர்ஸ், டரான்சியர்ஸ் ராணிப்பேட்டை வேலூர், திருச்சி ராக்போர்ட் ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ், கோவை பெடல்ஸ், மதுரை மாஸ் ரைடர்ஸ், குமரி ரைடர்ஸ் உள்ளிட்ட 8 நகரங்களில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வீரர்களுக்கு நியமிக்கப்பட்ட தூரம் 37 கிலோமீட்டர் ஆகும். இந்த சைக்கிள் லீக் போட்டியை விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற முதல் இடத்தை வென்ற டரான்சியர்ஸ் ராணிப்பேட்டை வேலூர் அணிக்கு தங்க கோப்பையும், 2-வது இடத்தை வென்ற மெட்ராஸ் ப்ரோ ரேசெர்ஸ் அணிக்கு வெள்ளி கோப்பையும், 3-வது இடம் பிடித்த கோவை பெடல்ஸ் அணிக்கு வெண்கல கோப்பையும் வழங்கப்பட்டது. தற்போது இந்த போட்டி முதல் சுற்று ஆகும். இன்னும் சில நாட்களில் 2-வது சுற்று நடைபெறும் எனவும் அதில் வெற்றி பெறுகிற அணிக்கு முதல் பரிசு ரூ.3 லட்சமும், 2-வது பரிசு ரூ.2 லட்சமும், 3-வது பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.