சினிமா பாணியில் இருசக்கர வாகனங்களை மோசடி செய்த 2 பேர் கைது
சினிமா பாணியில் இருசக்கர வாகனங்களை விலைக்கு வாங்குவதுபோல நடித்து அதை ஓட்டி பார்த்து வருவதாக கூறி நூதன முறையில் ஏமாற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
திருப்பரங்குன்றம்,
சினிமா பாணியில் இருசக்கர வாகனங்களை விலைக்கு வாங்குவதுபோல நடித்து அதை ஓட்டி பார்த்து வருவதாக கூறி நூதன முறையில், அபேஸ் செய்ததோடு ஆர்.சி புக்குடன் விற்பனை செய்து, ஏமாற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
நூதன முறையில் மோசடி
மதுரை சிந்தாமணி வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38) இவர் திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் ஆட்டோ கன்சல்டிங் நடத்தி வருகிறார். மேலும் அவர் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 2 பேர் வாகனங்கள் விற்பனை நிலையத்திற்கு வந்து ஒரிஜினல் ஆர்.சி. புக்குடன் வந்து ஒரு இருசக்கர வாகனத்தை ரூ.1.15 லட்சத்திற்கு விற்றுள்ளனர்.
இதற்கிடையில் அந்த வாகனத்தை விற்பனை செய்வதற்காக மணிகண்டன் ஆன்லைன் மற்றும் யூடியூப் வழியாக விளம்பரம் செய்துள்ளார். அதை கண்ட கோவையைச் சேர்ந்த இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் தனது இருசக்கர வாகனத்தை ஏமாற்றி நூதன முறையில் அபேஸ் செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்துள்ளதையும், புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஆதாரத்தை காட்டி போலீசார் உதவியுடன் வாகனத்தைப் பெற்றுச் சென்றார்.அப்போது தான் மணிகண்டன் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று தெரிந்து கொண்டதாக தெரிகிறது.
சினிமா பாணியில்
இதற்கிடையில் மணிகண்டன் தன்னைப்போல மற்ற இருசக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனங்கள் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக வாட்ஸ்ஆப் குரூப்பில் தகவல்களை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அதே 2 பேர் மதுரையில் ஆர்.சி.புக்குடன் ஒரு இருசக்கரவாகனத்தை விற்க முயன்றுள்ளனர். அதை அறிந்த மணிகண்டன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே திருப்பரங்குன்றம் போலீசார் விரைந்து சென்று 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் மதுரை கரும்பாலையைச் சேர்ந்த முருகேசன் (32), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அங்காடிமங்கலத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (34) என்று தெரியவந்தது. இவர்கள் சினிமா பாணியில் வாகனத்தை வாங்குவதற்கு முன்பு இருசக்கர வாகனத்தை ஓட்டிப் பார்த்து வருவதாக கூறி உள்ளனர். அதே பாணியில் முருகேசன், அரிகிருஷ்ணன் ஆகிய 2 பேரும், கோவை, பல்லடம் மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் நூதன முறையில் வாகனங்களை அபேஸ் செய்தது தெரிய வந்துள்ளது. இதனையொட்டி 2 பேரையும் போலீசார் கைது செய்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.