களக்காடு அருகே இருதரப்பினர் மோதல்; 11 பேர் மீது வழக்கு
களக்காடு அருகே இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள படலையார்குளம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 38). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தாயப்பன் (45) என்பவருக்கும் ஆடுகள் மேய்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மூங்கிலடி பத்துக்காட்டில் இசக்கியப்பனின் ஆடுகளை அவரிடம் வேலை பார்க்கும் ராஜா (22) என்பவர் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது தாயப்பனும் அங்கு ஆடுகளை மேய்க்க வந்தார். இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாயப்பன், அவரது மகன் கிருஷ்ணன் என்ற கிட்டு (19) ஆகியோர் சேர்ந்து ராஜாவை கம்பால் தாக்கியதாகவும், இதேபோல் இசக்கியப்பன், படலையார்குளத்தை சேர்ந்த இசக்கி (27), ராஜா மற்றும் 7 பேர் சேர்ந்து தாயப்பனை கம்பால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ராஜா, தாயப்பன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள், இருதரப்பை சேர்ந்த 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.