கோவிலில் உண்டியல் திருட்டு
கோவிலில் உண்டியல் திருட்டு போனது.
*திருச்சி பெரியமிளகுப்பாறை பகுதியில் உள்ள புத்தடி மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 வாலிபர்கள் உண்டியலை திருடிச்செல்வது குறித்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில், கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் முதலில் உண்டியலை உடைக்க முயற்சித்தனர். அப்போது சத்தம் கேட்டதால் உண்டியலை உடைக்க முடியாத நிலையில் உண்டியலை தூக்கிச்சென்று விட்டனர். அவர்கள் கோவிலை சுற்றி வருவதும், உண்டியலை தூக்கி செல்வதும் கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகி உள்ளது. இது குறித்து செசன்ஸ்கோர்ட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை திருடிய பெண்
*திருச்சி உறையூர் சீனிவாசநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி நந்தினி (வயது 29). இவர்களது வீட்டில் விருதுநகர் சிவகாசியை சேர்ந்த கற்பகவல்லி (57) என்பவர் வீட்டு வேலைகளை செய்து வந்தார். கடந்த 27-ந் தேதி வீட்டில் இருந்த 6½ பவுன் நகைகளை கற்பகவல்லி திருடியதாக தெரிகிறது. இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
கடையில் திருடியவர் சிக்கினார்
*திருச்சி பெரிய கம்மாளத்தெருவை சேர்ந்த ராஜீவ்சிங்கு (32). அப்பகுதியில் பரிசுப்பொருள் விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி காலை கடையை திறக்க வந்தபோது, கதவின் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ரூ.32 ஆயிரம் உள்பட ரூ.61 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போயிருந்தன. இது குறித்து புகாரின்பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த மகேந்திரனை(23) கைது செய்தனர்.
தூக்கில் தொங்கிய பெண்
*திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த வீரபாண்டியனின்(57) மனைவி சசிகலாதேவி (53). கடந்த 27-ந் தேதி பட்டுக்கோட்டை சென்ற வீரபாண்டியன், நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார். அவர் கதவை தட்டியும் திறக்காததால், ஜன்னல் கதவை உடைத்து உள்ளே பார்த்தார். அங்கு சசிகலாதேவி தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கஞ்சா விற்ற ஒருவர் கைது
*ராம்ஜி நகர், மில் காலனி, காளியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த லட்சுமணனை(44) எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்து, ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மாநகராட்சி லாரி மோதி வாலிபர் சாவு
*பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசீலன் (வயது 30). இவர் நேற்று தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த மாநகராட்சி குப்பை அள்ளும் லாரி அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர் மீது, லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.