சரணாலயங்கள் வறண்டதால் நீர்நிலைகளை தேடும் பறவைகள்


சரணாலயங்கள் வறண்டதால் நீர்நிலைகளை தேடும் பறவைகள்
x

முதுகுளத்தூர் பகுதியில் உள்ள 2 பறவைகள் சரணாலயங்களும் தண்ணீர் இன்றி வறண்டதால் நீர் நிலைகளை தேடி பறவைகள் சென்று வருகின்றன.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பகுதியில் உள்ள 2 பறவைகள் சரணாலயங்களும் தண்ணீர் இன்றி வறண்டதால் நீர் நிலைகளை தேடி பறவைகள் சென்று வருகின்றன.

சரணாலயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சக்கரக்கோட்டை கண்மாய், தேர்தங்கல், மேலச்செல்வனூர், சித்திரங்குடி, காஞ்சிரங்குளம் ஆகிய 5 இடங்களில் பறவைகள் சரணாலயம் அமைந்து உள்ளன. அதுபோல் முதுகுளத்தூரில் அமைந்துள்ள காஞ்சிரங்குளம் மற்றும் சித்திரங்குடி என 2 கிராமங்களில் பறவைகள் சரணாலயம் அமைந்து உள்ளது.

அதுபோல் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள காஞ்சிரங்குளம் மற்றும் சித்திரங்குடி ஆகிய 2 பறவைகள் சரணாலயங்களிலும் இந்த ஆண்டு பறவைகள் வரத்து மிக மிக குறைவாக இருந்தது. மேலும் இந்த பறவைகள் சரணாலயங்களிலும் முழுமையாக தண்ணீர் இன்றி வறண்டு போனதால் அனைத்து பறவைகளும் சரணாலயத்தில் இருந்து இடம் பெயர்ந்து விட்டன.

நீர்நிலை

இந்த நிலையில் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள காஞ்சிரங்குளம் சித்திரங்குடி சரணாலயங்களின் மேலே வானில் கூட்டமாக பறந்தபடி கூலைக்கடா பறவைகள் சுற்றி திரிந்தன. ஆனால் சரணாலயங்களில் தண்ணீர் இல்லாததால் வானில் வட்டமடித்தபடி கூலைக்கடா பறவைகள் மல்லல்-தாழியாரேந்தல் இடைப்பட்ட பகுதியில் உள்ள நீர்நிலைகளை தேடி கூட்டமாக பறந்து சென்றன.

கூலைக்கடா பறவைகளோடு ஏராளமான சாம்பல் நிற நாரை மற்றும் செங்கால் நரைகளும் பறந்தபடி நீர்நிலைகளை தேடி அலைந்து வருகின்றன.

கோரிக்கை

வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் இந்த ஆண்டாவது முதுகுளத்தூர் பகுதியில் உள்ள காஞ்சிரங்குளம், சித்திரங்குடி ஆகிய 2 பறவைகள் சரணாலயங்களிலும் கூடுதலாக தண்ணீர் சேமித்து வைத்து அதிகமான பறவைகள் மரக்கிளைகளில் தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்வதற்கான வழி வகைகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அந்த 2 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story