கோடியக்கரை சரணாலயத்தில் அதிக அளவில் குவியும் பறவைகள்


கோடிக்கரை சரணாலயத்திற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு அதிக அளவில் பறவைகள் வந்து குவிந்துள்ளன. புதிய வரவாக 22 ஆயிரம் கி.மீ. தூரம் பறந்து அமூர் பால்கன் பறவைகள் வந்துள்ளன.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

கோடிக்கரை சரணாலயத்திற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு அதிக அளவில் பறவைகள் வந்து குவிந்துள்ளன. புதிய வரவாக 22 ஆயிரம் கி.மீ. தூரம் பறந்து அமூர் பால்கன் பறவைகள் வந்துள்ளன.

கோடியக்கரை சரணாலயம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு நாடுகளில் இருந்து 290 வகையான பறவைகள் வந்து தங்கி செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் குவிந்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு பிறகு அதிக அளவில் பறவைகள் வந்துள்ளன. சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச் சிறப்பு ஆகும்.

புதிய வரவு

தற்போது பறவைகள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை நிலவுவதால் இந்த சரணாலயத்திற்கு புதிய வரவாக 22 ஆயிரம் கி.மீ. தொலைவை கடந்து வலசை வரும் குயில் வடிவில் காணப்படும் அமூர் பால்கன் பறவை வந்துள்ளது. இந்த பறவை வடகிழக்கு ரஷியா, சீனாவில் காணப்படும். அமூர் பால்கன் இனம், சைப்பிரியாவை கடந்து நாகாலாந்து வழியாக வட இந்திய பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வலசை வரும்.

இங்கு ஓய்வு எடுக்கும் இந்தப் பறவைகள் மத்திய இந்திய பகுதி வரை வந்து பின்னர் தென்னாப்பிரிக்கா செல்வது வழக்கம். தென் மாநிலங்களுக்கு அரிதாகவே வரும் இந்த பறவைகள் தற்போது கோடியக்கரையில் காணப்படுகின்றன.

பறவைகள் குவிந்துள்ளன

இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஊசிவால் வாத்து, நீலசிறகு வாத்து, நாம தலை வாத்து, புள்ளிவாத்து, கிளுவை வாத்து, பிங்டைல் வாத்து அதிக அளவில் வந்துள்ளன. இதேபோல் ரஷியாவில் இருந்து பவளக்கால் உள்ளான், உப்பு திண்ணி கொட்டான் பறவைகளும் வந்துள்ளன. உள்நாட்டு பறவைகளான வண்ண நாரை, கூழைகிடா பறவைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.

சென்ற ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பில் ஒரு லட்சம் பறவைகள் மேல் வந்திருந்தது. இந்த ஆண்டு பல லட்சம் பறவைகள் குவிந்துள்ளன.

சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள்

இதுகுறித்து கோடியக்கரை வனசரகர் அயூப்கான் கூறுகையில், கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் பறவைகளை கோடியக்கரை முனியப்பன் ஏரி, பம்ப் ஹவுஸ், கடற்கரைபகுதி உள்ளிட்ட இடங்களில் பறவைகளை காணலாம். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி, பைனாகுலர், தங்கும் இடம், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்


Next Story